
கோத்தா வருகை; ரணிலுக்கே சவால்
முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வருவதால் எங்களுக்கு எந்த சவாலும் கிடையாது என்றும், அது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே சவாலாக அமையும் என்றும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
முன்னாள் ஜனாதிபதிக்கு இலங்கையில் வந்திருப்பதற்கு எந்தத் தடையும் கிடையாது. ஆனால் அவரின் வருகை தொடர்பில் சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அவரை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதாகவும், பிரதமராக்கப் போவதாகவும் சிலர் கூறுகின்றனர். இது எந்தளவுக்கு இது யதார்த்தமானது என்று புரியவில்லை.
எவ்வாறாயினும் அவர் மீண்டும் அரசியலுக்கு வருவதால் ஐக்கிய மக்கள் சக்திக்கு எந்த சவாலும் கிடையாது. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே அது சவாலாக அமையும். இதேவேளை கோத்தாபய ராஜபக்ஷவின் அரசியலால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. மொட்டுக் கட்சி உள்ளிட்ட அவர்களின் அனைத்து அரசியல் செயற்பாடுகளையும் மக்கள் நிராகரித்துள்ளனர். இதனால் எந்தவொரு சவாலையும் ஏற்றுக்கொண்டு மக்களுக்காக முன்னால் வருவதற்கு சஜித் தலைமையில் நாங்கள் தயாராகவே உள்ளோம்.
அத்துடன் அனைத்துத் தரப்பினரையும் இணைத்துக்கொண்டு கூட்டணி அமைத்து பயணிக்கும் வேலைத்திட்டத்தை நாங்கள் தயாரிக்கவுள்ளோம் என்றார்.