இராஜாங்க அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு கோரி; பட்ஜெட்டை ஆதரிக்க பசில் தரப்பு நிபந்தனை

இராஜாங்க அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு கோரி; பட்ஜெட்டை ஆதரிக்க பசில் தரப்பு நிபந்தனை

சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் நடவடிக்கை தாமதமாகியுள்ள நிலையில், அதுவரையில் பார்த்துக்கொண்டு இருக்காது விரைவில் தங்களுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடும் அழுத்தம் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இராஜாங்க அமைச்சுப் பதவிகளை வழங்காவிட்டால் நாளை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு இவ்வாரம் நிறைவேற்றப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்போம் என்றும் பொதுஜன பெரமுனவை சேர்ந்த அந்தக் குழு எச்சரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் கடந்த வாரங்களில் நடைபெற்ற போதும், கட்சிகளுக்கு இடையே அது தொடர்பில் இறுதி இணக்கப்பாடுகள் எட்டப்படவில்லை. இதனால் அது தொடர்பான நடவடிக்கைகள் தாமதமடைந்துள்ளன.

இந்நிலையில், அரசாங்கத்துடன் இணையும் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்களை கொண்டு தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுக்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இதனால் அமைச்சரவை மறுசீரமைப்பு நடவடிக்கைகளை வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் மேற்கொள்வதற்கு ஜனாதிபதி தரப்பு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான நிலைமையில் சர்வகட்சி அரசாங்கம் மற்றும் தேசிய அரசாங்கத்தை காரணம் காட்டி இராஜாங்க அமைச்சுப் பதவிகளை வழங்குவதை தாமதப்படுத்த முடியாது என்றும், தங்களுக்கு விரைவில் இராஜாங்க அமைச்சுப் பதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுஜன பெரமுனவினர் ஜனாதிபதியை வலியுறுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது பஸில் ராஜபக்‌ஷ அணியினர், தங்களுக்குரிய சகல சலுகைகளுடனும் இராஜாங்க அமைச்சுப் பதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்த வாரத்தில் நிறைவேற்ற எதிர்பார்க்கும் வரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்போம் என்று ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பிலும், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதியினால் அவசரமாக இன்றைய தினத்தில் ஆளும் கட்சி குழுக் கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் அதனை பொதுஜன பெரமுனவின் குழுவொன்று பகிஷ்கரிக்க திட்டமிட்டுள்ளதாகவும். இதனால் அந்தக் கூட்டம் ஒத்தி வைக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )