
போராளிகளுக்கு பயந்து வெளிநாடுகளில் கோட்டா ஒளிவதை அனுமதிக்க முடியாது
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச போராளிகளுக்கு பயந்து வெளிநாடுகளில் ஒளிந்து கொள்வதை அனுமதிக்க முடியாது. அவருக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றுக்குப் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இவ்வாறு தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து அவர் இலங்கைக்கு வருவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் இந்த நாட்டின் பொதுப் பிரஜை போன்ற சுதந்திரம் இருக்க வேண்டும்.
அவர் தனது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டு இந்த நாட்டுக்கு சேவை செய்ய வந்தார். எனவே, அவர் போராளிகளுக்கு பயந்து வெளிநாடுகளில் ஒளிந்து கொள்வதை அனுமதிக்க முடியாது. இது அவரது மனித உரிமை மீறலாகும். எனவே, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, அவர் நாடு திரும்புவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தோம்.
அத்துடன், இடைக்கால அரசாங்கத்தையோ அல்லது இடைக்கால நிர்வாகத்தையோ விரைவில் ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாகவும் இந்த பிரச்சினையை இனியும் இழுத்தடிக்க இடமளிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
நாடு டொலர் நெருக்கடியை எதிர்நோக்கி வரும் நிலையில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ளது. தற்போதைய ஜனாதிபதியின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்ட பெரும்பான்மையானவர்கள் இன்று எதிர்க்கட்சியில் இருக்கின்றனர். கடந்த அரசாங்கத்தில் ஜே.வி.பி, முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற கட்சிகள் ஜனாதிபதியுடன் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

