
மருத்துவமனையில் மகிந்த… நாமலுக்கு அனுப்பிய கடிதத்தில் முக்கிய செய்தி!
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு விசேட கடிதமொன்றை அனுப்பியுள்ளதாகத் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய, அவரது செயலாளர் ஒருவரால் இந்தக் கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், கடிதத்தின் முழுமையான உள்ளடக்கங்கள் இதுவரை ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை.
மகிந்தவின் கடிதம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க ஊடாக, நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்த சந்தர்ப்பத்தில் குறித்த கடிதம் அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கடிதத்தின் மூலம், தனது மகன் நீதிமன்றத்தின் மீது மாத்திரம் நம்பிக்கை வைக்க வேண்டும் என மகிந்த ராஜபக்ச முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அத்துடன், நாமல் ராஜபக்ச 2010ஆம் ஆண்டு அரசியலில் பிரவேசித்தபோது தான் வழங்கிய அறிவுரையையும் முன்னாள் ஜனாதிபதி மீண்டும் நினைவுபடுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்போது, சிறைக்குச் செல்லவும் துன்பங்களை எதிர்கொள்ளவும் தயாராக இருந்தால் மாத்திரமே அரசியலில் பிரவேசிக்க அனுமதி வழங்குவதாகத் தனது மகனிடம் கூறியிருந்ததாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அரசியல் பயணத்தின் சவால்கள் குறித்து விளக்கியுள்ள மகிந்த ராஜபக்ச, தானும் அரசியலின் ஆரம்பக் காலத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டொன்றின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்ட அனுபவத்தைத் தனது மகனுக்கு நினைவுபடுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

