தியாக தீபம் திலீபன் சிலை விவகாரத்தில் கேள்வியாகும் ஈழத்தில் வாழும் தமிழ் மக்களின் நிலை! வ.கௌதமன் கண்டனம்

தியாக தீபம் திலீபன் சிலை விவகாரத்தில் கேள்வியாகும் ஈழத்தில் வாழும் தமிழ் மக்களின் நிலை! வ.கௌதமன் கண்டனம்

யாழ்ப்பாணம் நல்லூர் நினைவு முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு தமிழ்ப் பேரரசு கட்சியின் நிறுவுநரும் திரைப்பட இயக்குநருமான வ.கௌதமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரைத் தியாகம் செய்த திலீபனின் சிலை அகற்றப்பட்டுள்ள நிலையில், ஈழத்தில் வாழும் தமிழ் மக்களின் நிலை குறித்து கேள்விகள் எழுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்றக்கூடிய ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு தனது உயிரைத் தியாகம் செய்ததாகவும், அவரது தியாகத்தை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்ட சிலை அகற்றப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் வ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

சிலை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தையும் காவல்துறையையும் கடுமையாக விமர்சித்துள்ள அவர், இந்த நடவடிக்கை தமிழ் மக்களை அச்சுறுத்தும் நோக்கத்தைக் கொண்டதா என்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், கடந்த காலங்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னம் அகற்றப்பட்ட பின்னர், உலகத் தமிழர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து மீண்டும் அமைக்கப்பட்டதை அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று, திலீபனின் சிலையையும் மீண்டும் அதே இடத்தில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வாறு சிலை மீண்டும் நிறுவப்படாவிட்டால், இந்த விவகாரம் தொடர்பில் உலகத் தமிழர்கள் மத்தியில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்புகள் அதிகரிக்கும் எனவும் வ.கௌதமன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், திலீபனின் போராட்டத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் “மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற வாசகத்தையும் அவர் தனது அறிக்கையில் நினைவுகூர்ந்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )