கோட்டா கோ கம போராட்டக்காரர்களின் கூடாரங்கள் 10 ஆம் திகதி வரை அகற்றப்படமாட்டாது

கோட்டா கோ கம போராட்டக்காரர்களின் கூடாரங்கள் 10 ஆம் திகதி வரை அகற்றப்படமாட்டாது

கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள அனுமதியற்ற கட்டுமானங்கள் இம்மாதம் 10ஆம் திகதி வரை அகற்றப்பட மாட்டாது என சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் அகற்றப்பட மாட்டாது என்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் உறுதியளிக்கப்பட்டது.

காலி முகத்திடல் போராட்ட களம் தொடர்பான வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.

எனினும் இந்தக் காலப்பகுதிக்குள் இந்த அனுமதியற்ற நிர்மாணங்களை அகற்றுவது தொடர்பான ஆரம்ப சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பிரதிவாதிகளுக்கு எந்த தடையும் இல்லையெனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அத்துடன் தாமாக முன்வந்து அப்பகுதியை விட்டு வெளியேற விரும்புபவர்கள் வெளியேறுவதை இந்த தீர்மானம் தடுக்காது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னதாக காலி முகத்திடல் போராட்டக்களத்தில் உள்ள அரசாங்க அல்லது நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான காணியில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கட்டுமானங்கள் மற்றும் பயிர்ச்செய்கைகளை உடனடியாக அகற்றுமாறும் போராட்டக்காரர்களுக்கு கோட்டை பொலிஸாரால் கடந்த புதன்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டது.

எனினும் இதனை எதிர்த்து வியாழக்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நான்கு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினை பதவி விலகுமாறு கோரி மார்ச் 31 ஆம் திகதி காலி முகத்திடலில் ஆரம்பமான கோட்ட கோ கம காலி முகத்திடல் பகுதியில் 119 நாட்களாக செயற்பட்டு வந்தது. கோட்டை பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக அங்குள்ள கூடாரங்களை அகற்றும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டது.

எனினும் 119 நாட்களுக்குப் பின்னர் போராட்டக்களத்தின் முக்கிய தளமான கோட்டா கம நூலகத்தை அகற்றும் நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் போராட்டக்கள பகுதிக்கு வெள்ளிக்கிழமையும் சென்றிருந்த பொலிஸார் அந்த அறிவிப்பை மீண்டும் வாசித்துக் காட்டியுள்ளனர்.

இதேவேளை மீண்டும் வெள்ளிக்கிழமை தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இதற்கு மத்தியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் சந்தித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )