தமிழினப் படுகொலை வாரம் ஆரம்பம் – தமிழர் தேசமெங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு

தமிழினப் படுகொலை வாரம் ஆரம்பம் – தமிழர் தேசமெங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு

முல்லைத்தீவு

2009 ம் ஆண்டு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழினப்படுகொலை வாரம்  (12) முதல்  மே 18 வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு வருகிறது.

அந்தவகையில், முள்ளிவாய்க்காலில் கடந்த 2009 ம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் இலங்கை அரசின் திட்டமிட்ட தாக்குதல்கள் பொருளாதார தடைகள் என மக்களுக்கு உணவு மருந்து என எதையுமே கிடைக்கவிடாது தடுத்து உச்சக் கட்ட தாக்குதல்களை நடத்திய போது மக்களின் உயிர் காக்க பல்வேறு தொண்டு நிறுவனங்கள் வழங்கிய உப்புக் கஞ்சியே பலரின் உயிர் காக்கும் உணவாக மாறியிருந்தது.

இதனை விடவும் இந்த கஞ்சியை பெற்றுக் கொள்ள வரிசையில் நின்றவர்கள் மீது கூட திட்டமிட்டு அரசு நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்தனர்.

இந்த வரலாற்று உண்மைகளை உலகுக்கு சொல்லவும், எதிர்கால சந்ததிக்கு இந்த வரலாறுகளை எடுத்துச் சொல்லவும், இந்த தமிழினப் படுகொலை வாரத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்தவகையில் தமிழினப்படுகொலை வாரத்தின் முதல் நாளான இன்றைய தினம் (12) முல்லைத்தீவு முள்ளியவளை சந்தி அம்மன் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறப்பட்டது.

ஈழம் கவி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அகவத்தின் ஏற்பாட்டில் இந்த கஞ்சி பரிமாறும் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் ஞா.ஜீட்சன்,  கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் க.விஜிந்தன், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

நல்லூர்

அத்துடன் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் ஒரு பிரிவாகவும், தமிழ் தேசியப் பேரவையினர் ஒரு பகரிவாகவும் இவ்வாறு முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற வலி நிறைந்த நினைவுகளை சுமந்தவாறு முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தியும் வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் பயணிக்க தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இந்த நிரைவேந்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக் கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், தமிழ் தேசிய உணர்வார்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொண்டைமானாறு

இதேவேளை முள்ளிவாய்க்கால் கஞ்சியை நினைவு கூரும் ஆரம்ப நிகழ்வு இன்று தமிழரசு கட்சியினால் தொண்டைமானாறு சன்நிதி முருகன் ஆலயத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இதன்போது அதிகளவான மக்கள் கலந்துகொண்டு சிரட்டையில் கஞ்சி வாங்கி உண்டு இறுதி யுத்த முள்ளிவாய்க்கால் நினைவை பகிர்ந்து கொண்டனர்.

இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தலைமையில் பிரதேச உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு கஞ்சி வழங்கினர்.

திருகோணமலை

திருகோணமலை -பாட்டாளிபுரம் பகுதியில் இன்று காலை  முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிகழ்வை திருகோணமலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிரிழந்தவர்களுக்காக தீபச்சுடர் ஏற்றப்பட்டு,மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சு பரிமாறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி

மேலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் மற்றும் கனகபுரம் வீதியில் வாகன வாடகை உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டிலும் இன்று காலை 10 மணி அளவில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி  பகிர்ந்தளிக்கப்பட்டது.

நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மட்டக்களப்பு

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17வது ஆண்டை அனுஸ்டிக்கும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் அனுஸ்டிப்பு இன்றைய தினம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து நினைவேந்தல் வார நிகழ்வுகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

இதன்போது முள்ளிவாய்க்கால் அவலத்தின் நினைவாக வழங்கப்படுகின்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )