உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை நடத்திய சஹ்ரானுக்கு உதவியவர்களால் நாட்டுக்கு பெரும் ஆபத்து!; அவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை நடத்திய சஹ்ரானுக்கு உதவியவர்களால் நாட்டுக்கு பெரும் ஆபத்து!; அவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்திய சஹ்ரானுக்கு உதவியவர்கள் நாட்டில் வெளியே இருப்பார்களேயானால் அது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும், இதனால் அவர்களை கண்டுபிடித்து உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன்னால் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.

தன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிவித்துறு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில மற்றும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர ஆகியோர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு தனது கருத்துக்களை வெளியிடுகையிலேயே முஜிபூர் ரஹ்மான் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

உதய கம்மன்பில உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான புத்தகத்தில் சஹரான் ஹசீம் பொறுப்பு கூற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் அவர் பொறுப்புக் கூற வேண்டியவராக இருந்தாலும் அவருடன் தொடர்புகளை பேணிய சில தரப்பினர் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் உள்ளது. முன்னாள் புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதான சுரேஷ் சலே சஹ்ரானின் குழுவுடன் தொடர்புகளை பேணியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படியே இந்த அரசாங்கம் அவரை கைது செய்து விசாரணை நடத்துகின்றது.

ஆனால் சுரேஷ் சலேவிடம் விசாரணை நடத்தும் போது சரத் வீரசேகரவுக்கு ஏன் வயர் மாறுகின்றது என்றும், கம்மன்பில ஏன் குழப்பமடைய வேண்டும் என்றும் புரியவில்லை. சரத் வீரசேகர பொலிஸ் அமைச்சராக இரண்டு வருடங்களாக கோதாபய ராஜபக்‌ஷ காலத்தில் இருந்தார். ஏன் என்னை அப்போது கைது செய்யவில்லை. அதாவது பிரதான சூத்திரதாரிகளைத் தேடிச் செல்கையில் அவர்கள் பயந்துள்ளனர் என்றே கூற வேண்டும். சுரேஷ் சலேயின் வாக்குமூலங்களை பார்த்தால் சஹ்ரானுடன் தொடர்புடையவர்கள் யார் என்பதனை தெரிந்துகொள்ளலாம்.

எவ்வாறாயினும் சஹ்ரானுக்கு உதவியவர்கள், அவருக்கு தேவையானவற்றை செய்தவர்கள், அவர் எவருடைய தேவைக்காகவும் இதனை செய்திருந்தால், அவ்வாறு உதவியளித்த குழுக்கள் இந்த நாட்டில் வெளியில் இருப்பார்களாக இருந்தால் அவர்கள் எமது தேசிய பாதுகாப்புக்கும், தேசிய ஐக்கியத்திற்கும் அச்சுறுத்தலாகும். அந்த குழுக்களை உடனடியாக கைது செய்து அவர்களை சட்டத்தின் முன்னால் கொண்டு வர வேண்டும். இதுவே எனது நிலைப்பாடாகும். இதனை கூறும் போது ஏன் சரத் வீரசேகர போன்றோர் குழப்பமடைய வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மூலம் நாட்டுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தாக்குதலுக்கு பின்னால் இருந்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும். அத்துடன் என்னைப் பற்றி கூறப்பட்டுள்ள கருத்துக்கள் தொடர்பிலும் எனது நற்பெயருக்கு பங்கம் ஏற்படுத்தியமை தொடர்பிலும் சட்டப்படி சடவடிக்கை எடுப்பேன் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )