
பேரணி பற்றிய பேச்சு தொடங்கியதிலிருந்து அரசாங்க பிரதிநிதிகளுக்கு காய்ச்சல் வர தொடங்கிவிட்டது ; கம்மன்பில சாடல்!
அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் இன்று நுகேகொடையில் இடம்பெற்றது. பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் கூட்டு எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்து நுகேகொடையில் முன்னெடுத்த அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் கலந்துகொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
இனி உங்களால் மக்களை ஏமாற்ற முடியாது. இந்த கொட்டும் மழையிலும் இங்கு வந்துள்ள மக்கள் வெள்ளத்தை பாருங்கள், உங்கள் பொய்கள் இப்போது வெளிவந்துவிட்டது.
இன்னும் இந்த நாட்டு மக்கள் எங்கள் பக்கம் தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், இனி உங்களால் இப்படி ஒரு மக்கள் கூட்டத்தை கூட்டமுடியாது டில்வின் சில்வா அவர்களே எங்களை போன்று கூட்டம் வேண்டும் என்றால் இனி நீங்கள் புதிய மைதானத்தை தான் உருவாக்க வேண்டும்.
இலங்கை அரசியல் வரலாற்றில் இதற்கு முன்பு எந்தவொரு ஆளும் அரசாங்கமும் இப்படி பேரணிக்கு பயந்தது கிடையாது ஆனால் தற்போதை அரசாங்கம் எங்கள் பேரணியை பார்த்து பயந்தார்கள்.
பேரணி பற்றிய பேச்சு தொடங்கியதிலிருந்து அரசாங்க பிரதிநிதிகளுக்கு காய்ச்சல் வர தொடங்கிவிட்டது.
நேற்று தங்காலையில் எங்களுக்கும் மக்கள் பலம் இருக்கிறது என்று காட்டுவதற்கு நீங்கள் கூட்டத்தை கூட்டினீர்கள் ஆனால் அது தோல்வியடைந்தது.
பொலிசார் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள்.
எங்களுக்கு தெரியும் இங்குள்ள பொலிசாரும் இந்த காக்கி சட்டையை போட வில்லை என்றால் இன்று எங்களுக்கு கைதட்டி இருப்பார்கள், நீங்கள் கைதட்டவில்லை என்று உங்கள் மீது எங்களுக்கு கோபம் இல்லை,நீங்கள் கவலையிலும் கோபத்திலும் தான் இருக்கிறீர்கள் என்று எங்களுக்கு தெரியும், காலம் வரும் பயப்படவேண்டாம் நாங்கள் உங்களுடன் தான் இருக்கிறோம்.

