
நல்லூரில் தியாகி திலீபனின் நினைவேந்தலை இனி யாழ் மாநகர சபையே அனுஷ்டிக்கும்
நல்லூரில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல், மாவீரர் நாள் நினைவேந்தலை எதிர்வரும் காலங்களில் மாநகர சபையே அனுஷ்டிக்கும் என யாழ் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா அறிவித்தார்.
மாநகர முதல்வரின் குறித்த அறிவிப்பால் யாழ் மாநகர சபை அமர்வில் உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதன்போது முதல்வரின் அறிவிப்பில், மாவீரர் நாள் நினைவேந்தலை செய்வதற்கு நல்லூரில் ஒரே இடத்தை இரண்டு தரப்புக்கள் கோரும் நிலையில் அந்த இடத்தை மாவீரர் வார காலத்தில் வாடகைக்கு விடாமல் இருக்கவும், எதிர்வரும் காலங்களில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல், நல்லூரில் மாவீரர் நாள் நினைவேந்தலை யாழ் மாநகர சபையை பொறுப்பெடுத்து செய்வதும் என்ற யோசனையை முன்வைத்தார்.
முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
குறித்த யோசனைக்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் ஒரு தரப்பு நினைவேந்தலை செய்யும் போது அதை குழப்ப கூடாது என தெரிவித்தனர். மேலும் நாங்கள் நினைவேந்தல் செய்யும்போது, எங்களுடன் இணைந்து செய்யுங்கள் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் ஏனையவர்களிடம் தெரிவித்தார். அத்துடன் நல்லூர் பகுதியில் மாவீரர் நாள் நினைவேந்தலை செய்ய எமக்கு அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
அதேவேளை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி உள்ளிட்ட ஏனைய கட்சி உறுப்பினர்கள் முதல்வரின் யோசனையை வரவேற்றனர்.
இந்த யோசனை தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டதையடுத்து ஒரு வார காலத்தில் குறித்த விடயத்திற்கு இணக்கமாக வேண்டும் என்றும் இல்லாவிட்டால் மாநகர சபை முதல்வர் தலைமையில் மாநகர சபை நினைவேந்தலை பொறுப்பெடுத்து செய்யும் – என்றார்.

