
மாகாணங்களுக்கு பெற்றுக்கொண்ட அதிகாரங்களை மத்தியிடம் தாரைவார்க்காதீர்
சிலர் அறிந்தோ அறியாமலோ மாகாணசபைகளின் அதிகாரங்களை மீண்டும் மத்தியிடம் கொடுக்க முயற்சிக்கின்றனர். இத்தகைய போக்கு தமிழ்த் தேசிய இனத்தின் அதிகாரப்பகிர்விற்கான போராட்டத்தின் அடிப்படையையே இல்லாமல் செய்துவிடும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;
மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்திரு. அ. ஞானப்பிரகாசம் அவர்கள் கடந்த 18 ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதியைச் சந்தித்து மன்னார் மாவட்ட பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியதாக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் தமிழ்நேசன் அடிகளார் ஊடகங்களுக்கு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். இதில் குறிப்பாக மன்னார் வைத்தியசாலையை மாகாண நிர்வாகத்திடமிருந்து எடுத்து மத்திய அரசாங்கம் அதனை நிர்வகிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
மன்னார் வைத்தியசாலையை மத்திய அரசிடம் ஒப்படைப்பதற்கான இதே கோரிக்கை சில மாதங்களுக்கு முன்னர் மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் அரச அதிபர், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக பல்வேறுபட்ட அமைப்புகளையும் சேர்ந்த அதியுயர் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு கூட்ட அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளது. இந்த முடிவில் இருக்கக்கூடிய பிழைகள் தவறுகள் தொடர்பாக அரசியல் கட்சிகளும் அரசியல் தலைமைகளும் அன்றே சுட்டிக்காட்டின.
இப்பொழுது நடைமுறையிலிருக்கின்ற மாகாணசபை என்பதும் அதற்குக் கிடைத்திருக்கின்ற அதிகாரங்கள் என்பதும் பலத்த போராட்டம் பலத்த இழப்புகளுக்குப் பின்பே கிடைத்தது. இதற்காக நாம் சிந்திய இரத்தம் ஏராளம். அதிகாரப்பகிர்விற்காகத் தமிழ் மக்கள் போராடிக்கொண்டிருக்கின்ற ஒரு சூழலில் கிடைத்த அதிகாரத்தை மீள மத்திய அரசிடம் ஒப்படைப்பது போன்ற ஒரு மோசமான செயல் இருக்க முடியாது. தமிழ்த் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தில் பல கிறித்தவ பாதிரியார்களும் தமது உயிரையே அர்ப்பணித்துள்ளார்கள். இன்றும்கூட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இனவழிப்பிற்கான ஒரு தீர்வு கிடைக்க வேண்டும். தமிழ் மக்கள் முழு அதிகாரங்களுடன் தமக்கான ஒரு சுயாட்சியை நிறுவிக்கொள்ள வேண்டும் என்பதில் கிறித்தவ மதகுருமார்கள் உட்பட இந்து சமய மதகுருமார்களும் உறுதியாக இருக்கின்றனர்.
மன்னார் மாவட்ட ஆயராக இருந்த திரு. இராயப்பு ஜோசப் அவர்கள் தமிழ் மக்களுக்கான அதிகாரங்களைப் பெற்றெடுப்பது என்பதில் மிகக் காத்திரமான துணிச்சலான பங்களிப்பை வழங்கியிருந்தார். தனது இறுதி மூச்சுவரை அதற்காகவே பாடுபட்டார்.
மன்னார் வைத்தியசாலையில் பல குறைபாடுகள் இருக்கலாம். ஆளணி பற்றாக்குறை, மருந்துகளுக்கான தட்டுப்பாடுகள், மாவட்ட வைத்தியசாலை என்ற அடிப்படையில் அதன் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கலாம். கடந்த ஏழு ஆண்டுகளாக மாகாணசபை இல்லாத நிலையில், அந்த வைத்தியசாலையின் தேவைகளை மன்னார் மாவட்ட நிர்வாகிகளோ, ஆயரோ, அல்லது நலன் விரும்பிகளோ ஜனாதிபதியிடமோ அரசிடமோ கேட்டுப்பெறுவதென்பது தவறானதல்ல. அதனை விடுத்து, வைத்தியசாலையையே மத்திய அரசிடம் ஒப்படைப்பதென்பது அதிகாரப் பகிர்வுக்காகப் போராடும் எமது அடிப்படையையே சிதைப்பதாகும். சிங்கள தரப்பின் ஒரு பகுதியினர் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படக்கூடாதென்பதில் இன்னும் உறுதியாக இருக்கின்றனர்.
விமல் வீரவன்ச, சரத்வீரசேகர, உதய கம்மன்பில போன்றவர்களும் இப்பொழுது ஆட்சியில் இருப்பவர்களும்கூட அதிகாரப்பகிர்வை ஏற்றுக்கொள்ளாத தரப்பினராகவே இருக்கின்றனர்.
சுகாதாரத் துறையின் அதிகாரப் பகிர்வில் போதனா வைத்தியசாலைகள் தவிர்ந்த ஏனைய சகல வைத்தியசாலைகளும் மாகாண அரசிற்கு உட்பட்டவையாகவே இருக்கின்றன. வடக்கு மாகாணம் ஆட்சியில் இருந்தபொழுது மாகாண சுகாதாரத்துறை தொடர்பாக ஒரு நியதிச் சட்டத்தையும் உருவாக்கியிருந்தனர். அதன் பிரகாரம் மாகாணசபைக்கு உட்பட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்பதாக இருந்தால் அது மாகாணசபையின் பெரும்பான்மையின் ஒப்புதலுடனேயே முடியும். அவ்வாறு இல்லாமல் செய்வதென்பது அரசியலமைப்பை மீறும் செயலாகும்.
ஆகவே நிலைமைகள் இவ்வாறிருக்க, சில அதிகாரிகளும் மதத் தலைவர்களும் எமக்குக் கிடைத்த அதிகாரங்களை மீளவும் ஒப்படைக்க தீர்மான்ஙகளை நிறைவேற்றுவதும் அதுதொடர்பான பேச்சுவார்த்தைகளை நடாத்துவதும் மிகவும் தவறானதும் பிழையானதுமான செயற்பாடுகள் மட்டுமன்றி அதிகாரப் பகிர்வுக்கு எதிரான செயற்பாடுமாகும்.
அதிகாரிகளிடமும்; மதத் தலைவர்களிடமும் நாம் விணயமாக வேண்டுவதென்னவென்றால் மாகாணசபைகளுக்குக் கிடைத்திருக்கக்கூடிய அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, அவற்றை மீள ஒப்படைப்பது தொடர்பாக சிந்திப்பதோ, முயற்சிப்பதோ ஒரு தவறான அணுகுமுறையாகும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
மாகாண அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதில் பல இடர்பாடுகளை அதிகாரிகள் சந்திக்கலாம். நிதி வளங்கள் குறைவாக இருக்கலாம். ஆளணிகள் குறைவாக இருக்கலாம். வேறுபல குறைபாடுகளும் ஏற்படலாம். இவற்றை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பதை நிர்வாகிகள் சிந்திக்க வேண்டுமே தவிர, மாகாண வைத்தியசாலைகளை மீள ஒப்படைப்பதென்பது போராடிப்பெற்ற சில அதிகாரங்களை நாமே கைவிடுவதாகும். அதிகாரப்பகிர்வு என்னும் எமது பிரதான கோரிக்கையை சிறுமைப்படுத்துவதுமாகும்.