
செம்மணிப் புதைகுழி மீண்டும் இன்று வழக்கு; முக்கிய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும்
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இன்றைய வழக்கு விசாரணையின் போது அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளுக்கு மேலதிகமாகப் புதைகுழிகள் காணப்படுகின்றனவா? என்பதைக் கண்டறியும் நோக்குடன் கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட ஸ்கேன் நடவடிக்கையின் அறிக்கை , மண் பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட சில முக்கிய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இந்த மாதம்-07 ஆம் திகதியுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில் அடுத்த கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும்- 21 ஆம் திகதி ஆரம்பமாகுமென முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும், இன்றைய வழக்கு விசாரணைகளின் போது அடுத்தகட்ட அகழ்வுப் பணிகள் தொடர்பான திகதி உத்தியோகபூர்வமான முறையில் அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.