
புதிய பிரேரணைக்கான ஆதரவு திரட்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பியுங்கள்..!
உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் சார்ந்து இலங்கையில் இயங்கிவரும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளும், சிவில் சமூக அமைப்புக்களும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள புதிய பிரேரணைக்கு ஆதரவு திரட்டுவதை முன்னிறுத்தி ஒன்றிணைந்து செயலாற்றவேண்டியது மிக அவசியம் எனவும், குறிப்பாக மேற்குலக நாடுகள் அல்லாத ஏனைய உறுப்புநாடுகளின் ஆதரவை பெறுவதற்குரிய பேச்சுவார்த்தைகளை இப்போதே ஆரம்பிக்கவேண்டும் எனவும் பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அன்றைய தினம் இலங்கை தொடர்பில் விரிவான எழுத்துமூல அறிக்கை உயர்ஸ்தானிகரால் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இலங்கை தொடர்பில் தற்போது நடைமுறையில் இருக்கும் ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தீர்மானம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு வரும் நிலையில், இலங்கை தொடர்பில் புதியதொரு தீர்மானத்தைக் கொண்டு வரவிருப்பதாக பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகள் அறிவித்துள்ளன.
இந்நிலையில் புதிய தீர்மானத்தில் உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணை அனுசரணை நாடுகளின் இராஜதந்திரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருவதுடன் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் மற்றும் இணையனுசரணை நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் கடிதங்களை அனுப்பி வருகின்றனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் இவ்விவகாரம் தொடர்பில் இலங்கையில் செயலாற்றிவரும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளும், சிவில் சமூக அமைப்புக்களும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள புதிய பிரேரணைக்கு ஆதரவு திரட்டுவதை முன்னிறுத்தி ஒன்றிணைந்து செயலாற்றவேண்டியது மிக அவசியம் என பிரித்தானியத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் வலியுறுத்தினார்.
குறிப்பாக பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் மேற்குலக நாடுகள் அல்லாத ஏனைய உறுப்புநாடுகளின் ஆதரவைத் திரட்டுவதில் முனைப்புடன் செயலாற்றவேண்டும் எனச் சுட்டிக்காட்டிய அவர், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் அந்நாடுகளை தமக்கிடையே சரிவரப் பிரித்துக்கொண்டு, பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதன் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்படும் புதிய பிரேரணைக்கு ஆதரவாக 47 இல் 25 வாக்குகளைப் பெற்றுக் கொள்ளமுடியும் என நம்பிக்கை வெளியிட்டார்.