வட, கிழக்கில் இராணுவத்தினர் தொடர்ந்தும் இருப்பது ஆபத்து; இனப்படுகொலை வெறியில் உள்ளதால் தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தல்

வட, கிழக்கில் இராணுவத்தினர் தொடர்ந்தும் இருப்பது ஆபத்து; இனப்படுகொலை வெறியில் உள்ளதால் தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தல்

இராணுவம் தொடர்ந்தும் அதே இனப்படுகொலை வெறியில் இருக்கின்ற வரைக்கும் வடக்கு-கிழக்குத் தமிழ்மக்களுக்குப் பாதுகாப்பு இருக்கப் போவதில்லை எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு முத்துஐயன்கட்டுக் குளத்தில் கண்டறியப்பட்ட இளம் குடும்பஸ்தரின் சடலம் இராணுவத்தினரால் அவர் கொல்லப்பட்டு அங்கு கொண்டு வந்து போடப்பட்டிருப்பதாகவே எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

ஆட்சி மாற்றத்தின் பின்னரும் முல்லைத்தீவில் ஒரு இராணுவச் சிப்பாய்க்கு இரண்டு பொதுமக்கள் என்ற அடிப்படையில் தான் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர்.அங்கு கொலை நடந்தால் கூட இராணுவத்திற்கு தெரியாமல் நடக்க முடியாத நிலைதான் அங்கு காணப்படுகின்றது. எனவே, இராணுவத்தினரின் விருப்பத்திற்கு மாறாக அங்கு எதுவும் நடக்க வாய்ப்பில்லை என்பது தான் தற்போதைய நிலைமை.

இனப் படுகொலையை இராணுவம் செய்திருக்கின்ற நிலையில் 16 வருடங்களாக அந்த இனப் படுகொலை தொடர்பாக எந்தவித பொறுப்புக் கூறலும் முன்னெடுக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் இனப் படுகொலையில் ஈடுபட்ட இராணுவத்தினர் தமிழ்மக்களின் பக்கத்து பக்கத்து வீடுகளிலும், முகாம்களிலும் தங்கியுள்ளனர். பெண்களைத் துஷ்பிரயோகம் செய்தவர்களே எங்கள் வீதிகளில் நடந்து செல்கின்றார்கள். பிள்ளைகளைக் கடத்தி துஷ்பிரயோகம் செய்தவர்களே பக்கத்தில் வந்து நிற்கிறார்கள். பாடசாலைகளுக்குச் செல்கின்றார்கள். சிவில் பாதுகாப்புப் படையினர் எனத் தெரிவித்து விட்டு முன்பள்ளிகளில் படிப்பிக்கின்றார்கள்.

இராணுவத்தினர் செய்த நேரடிக் குற்றங்களுக்குப் பொறுப்புக் கூற வைக்கப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும். தொடர்ந்தும் குற்றமிழைத்த இராணுவத்தினர் தண்டிக்கப்படாமல் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியிலிருப்பது என்பது அந்த மக்களை மிக மோசமான மன உளைச்சலுக்குத் தள்ளி அவர்களின் மனங்களை உடைப்பதற்குத் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் செயலாகத் தான் நாங்கள் பார்க்கின்றோம். இராணுவம் வடக்கு-கிழக்கிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன்வைப்பதற்கு காரணம் ஏதோ எங்களுக்கு விசர் என்பதற்காக அல்ல. இராணுவத்தினர் இங்கிருப்பதே ஆபத்து எனவும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )