
104 எலும்புக் கூடுகள் இதுவரை கண்டுபிடிப்பு; இரு நாட்களில் எட்டு சான்றுப் பொருட்கள்
செம்மணி மனிதப் புதைகுழியில் 104 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு இலக்கமிடப்பட்டதுடன் கடந்த இரண்டு தினங்களில் எட்டு சான்றுப் பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.
செம்மணி அகழ்வுப் பணிகள் இரண்டாம் கட்டத்தின் 23 ஆவது நாள் யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
அகழ்வு பணிக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதிதாக மூன்று மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 101 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன் இன்று அடையாளம் காணப்பட்ட மூன்று புதிய மனித எலும்பு கூடுகளோடு 104 மனித எலும்புக்கூடுகள் சுத்தப்படுத்தப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளன.
முழுதான எலும்புத் தொகுதியொன்று அகந்தெடுக்கப்பட்டு நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது.
நாளையும்(இன்று) இதே போல அகழ்வுப் பணிகள் காலை 8 மணிக்கு ஆரம்பித்து இரவு 7.30 மணி வரை நடைபெறும்.
நேற்றைய தினமும்(ஞாயிறு)இன்றைய தினமும்(திங்கள்) சேகரிக்கப்பட்ட சான்றுப் பொருட்களில் மொத்தமாக எட்டு சான்றுப் பொருட்கள் சுத்தப்படுத்தப்பட்டு இலக்கமிடப்பட்டு நீதிமன்றத்தின் கட்டு காவலில் கையளிக்கப்பட்டுள்ளது.
மயான பகுதியை ஸ்கான் செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இன்று வரை கொடுக்கப்படாததால் குறிக்கப்பட்ட பகுதியான உபகரணத்தை மாத்திரம் கொண்டு சிலவேளை செவ்வாய்க்கிழமை அல்லது புதன்கிழமை ஸ்கான் செய்யப்படும் என்றார்.