
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நல்லூர் கிட்டுப் பூங்காவில் அணி திரள்வுப் போராட்டம்
சிறைகளுக்குள் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை நினைவு கூர்ந்தும், சிறைகளிலிருந்து விடுவிக்கப்படாத உறவுகளின் விடுதலை வேண்டியும் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று வியாழக்கிழமை (24) யாழ் நல்லூர் கிட்டுப் பூங்காவில் ‘விடுதலை’ எனும் தொனிப்பொருளிலான அணிதிரள்வுப் போராட்டம் ஆரம்பமானது.
நல்லூர் சங்கிலியன் தோரண வாசல் முன்பாக நேற்று முற்பகல்-10.30 மணியளவில் அமைதிப் பேரணி ஆரம்பமாகி நல்லூர் கிட்டுப் பூங்கா வரை முன்னெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறை போன்ற மாதிரி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ள நுழைவாயில் ஊடாகச் சென்று கிட்டுப் பூங்கா வளாகத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து 15 வருடங்களாக அரசியல் கைதியாகவிருந்து விடுவிக்கப்பட்ட விவேகானந்தனூர் சதீஸ் எழுதிய துருவேறும் கைவிலங்கு நூல் அறிமுகமும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி நீர் சேகரிப்பும், சிறைவாழ்க்கை உணர் கண்காட்சியும், ஆவண ஒளித் தொகுப்பு வெளியீடும் இடம்பெற்றது.
இந் நிகழ்வுகளில் தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், முன்னாள் போராளிகள், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு.வேலன் சுவாமிகள், யாழ்.மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன், கிறிஸ்தவ மத குருமார்கள், அருட்சகோதரிகள், தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள், சிவில்- சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, நேற்று ஆரம்பமான அணிதிரள்வுப் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமையும் (25.07.2025) தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளது. இன்றைய நாளில் சிறைகளுக்குள் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கான அஞ்சலி நிகழ்வும் நடைபெறுமெனப் போராட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.