
இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் நடக்குமானால் செம்மணி விசாரணையை பொலிஸார் குழப்புவர்
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் முழுமையாக சர்வதேச ரீதியில் செய்யப்பட வேண்டும்.இல்லையேல் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித நீதிக்குமான வாய்ப்பு கிட்டாது போகும்.மேலும்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை பொலிஸாரே கையாளும் நிலையில் இந்த விசாரணை ஊடாக இறுதிக் கட்டத்தில் வரக்கூடிய முடிவுகள் அனைத்தும் குழம்புவதற்கான வாய்ப்புகள் தான் நிறையவே இருக்கிறது என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
சமகால நிலைமைகள் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் நீதிவானின் கண்காணிப்பில் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடைபெறுகின்றது.
அதைத் தாண்டி அந்த விடயங்களை கையாளுகின்ற தரப்புகள், அவர்களுடைய செயற்பாடுகளை வேறு எவரும் உறுதிப்படுத்த முடியாது.
என்னுடைய தகப்பனாரின் கொலையை எடுத்துக் கொண்டால் ஒரு சட்டத்தரணி என்ற வகையில் அந்த கொலை நடந்ததற்கு பிறகு அதனை நீதிமன்ற நடவடிக்கையில் விளங்கப்படுத்திய போது,
விசாரணை நடத்திய பொலிஸார்,தங்கள் விசாரணையில் கொலை சம்பந்தமான ஆதாரங்களை ஒருங்கிணைத்து எந்த விதமான சந்தேகமும் இல்லாமல் அதனை குழப்புவதாகவே நடந்து கொண்டார்கள். இது நான் கண்கண்ட சாட்சி.
செம்மணியில் நீதிவான் விசாரணையை நடத்த வேண்டும் என்று சொன்னாலும் கூட இறுதியில் அந்த விசாரணை நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுகின்ற போது சாட்சியங்களை முழுக்க முழுக்க கையாள்வது பொலிசாராகவே இருக்கும் நிலையில்,பொலிசார் தொடர்பில் நாங்கள் எதுவும் புதிதாகக் கூறத் தேவையில்லை. இலங்கையில் பொலிசாருடைய செயற்பாட்டில் எங்களுக்கு அனுபவம் இருக்கிறது. இதைப் பற்றி நாம் சொல்லத் தேவையில்லை.
இந்த தரப்பு இதை கையாளும் நிலையில் இந்த விசாரணை ஊடாக இறுதிக் கட்டத்தில் வரக்கூடிய முடிவுகள் அனைத்தும் குழம்புவதற்கான வாய்ப்புகள் தான் நிறையவே இருக்கிறது.
இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த அநியாயங்கள் அனைத்திலுமே எவருமே குற்றவாளிகளாக நிரூபிக்க முடியாத நிலைமையை இருக்கின்றது. இதனை இலங்கை அரசாங்கங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இதுவே வரலாறு.
பொறுப்புக்கூறல் சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் நடைபெற்ற அனைத்தினதும் வரலாறுமே அதுதான். தற்செயலாக சர்வதேச மட்டத்தில் இருந்து வரக்கூடிய கடும் அழுத்தம் காரணமாக குற்றவாளியாக ஒருவர் நிரூபிக்கப்படுவாரானால் அவர் ஒன்றில் மேன்முறையீட்டில் விடுவிக்கப்படுவார். இல்லாவிடில் பொது மன்னிப்பில் விடுவிக்கப்படுவார். இதுவே இந்த நாட்டில் யதார்த்தம்.
இதைத் தவிர்த்துக் கொள்வதாக இருந்தால் நீதிமன்றம் இந்த சாட்சியங்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் பாதுகாத்து உறுதிப்படுத்துவதை மாத்திரமே செய்யலாம். நடக்கிற விசாரணைகள் எல்லாமே எங்களைப் பொறுத்தவரையில் இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் நடக்கக்கூடாது என்பதே எமது நிலைப்பாடு.
சர்வதேச மட்டத்தில் நடத்தப்பட வேண்டிய விடயம். இந்த அகழ்வுகள் முழுமையாக சர்வதேச மட்டத்தில் செய்யப்பட வேண்டிய விடயமாகவே நாம் பார்க்கிறோம் – என்றார்.