டிரம்ப் கெஞ்சியதால் தான் போர் நிறுத்தத்திற்கு சம்மதம்!; ஈரான் கூறினாலும் தாக்குதல்கள் தொடர்கிறது

டிரம்ப் கெஞ்சியதால் தான் போர் நிறுத்தத்திற்கு சம்மதம்!; ஈரான் கூறினாலும் தாக்குதல்கள் தொடர்கிறது

இஸ்ரேல், ஈரான் இடையிலான பதற்றமான போர் சூழல் சர்வதேச அரசியல் தளத்தையும் உலக பொருளாதார தளத்தையும் பெரும் பீதி கொள்ளவைத்திருந்த நிலையில், இரு நாடுகளும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டிருப்பதாக அறிவித்திருக்கின்றன. ஆனால், போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்ட பின்னர், தங்கள் நாடு மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ள இஸ்ரேல், பதிலடி தாக்குதல்களுக்கும் உத்தரவிட்டுள்ளது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், போர் நிறுத்தம் தொடங்கிய பின்னர் எந்த தாக்குதலும் நடத்தவில்லை என ஈரான் மறுப்பு தெரிவித்தது.

ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் நேற்று செவ்வாய்க்கிழமை 12-வது நாளை எட்டிய நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்மொழிவின் பேரில் இரு நாடுகளும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன.

இந்த நிலையில், ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. ஈரானிலிருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்திய நிலையில், பல இஸ்ரேல் நகரங்களில் சைரன்கள் ஒலித்தன. இதனால் டெல் அவிவில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்ததாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து பேசிய இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ், “அமெரிக்க ஜனாதிபதி அறிவித்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை வெளிப்படையாக மீறியுள்ள ஈரான், இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை வீசியுள்ளது. போர்நிறுத்த மீறலுக்கு பதிலளிக்கும் எங்களின் கொள்கையின்படி, ஈரானில் உள்ள அரசு சொத்துக்கள் மற்றும் பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து அதிதீவிர நடவடிக்கைகளைத் தொடர நான் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்” என்று கூறினார்.

இருப்பினும் இஸ்ரேலின் குற்றச்சாட்டை ஈரான் உறுதியாக மறுத்துள்ளது. போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்ட பின்னர் இஸ்ரேல் மீது எந்த தாக்குதலையும் நடத்தவில்லை என ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சியில் வெளியான செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலுடனான சண்டையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கெஞ்சியதால் தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக ஈரான் அரசு ஊடகம் அறிவித்தது. மேலும் ஈரானின் ஊடகம் இந்த செய்தியை வெளியிடுவதற்கு சற்று முன்பு கூட ஈரானின் ஏவுகணை தெற்கு இஸ்ரேலை தாக்கியதாக தகவல் வெளியானது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, ஈரான் மீதான தாக்குதலின் இலக்குகளை அடைந்ததால், போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் முன்மொழிவை ஒப்புக்கொண்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஈரானுக்கு எதிரான ஒபரேஷன் ரைசிங் லயனின் அனைத்து நோக்கங்களையும் இஸ்ரேல் அடைந்துவிட்டது. இதன் மூலமாக ஈரானின் அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தல்களை வெற்றிகரமாக நீக்கியுள்ளோம்.

ஈரான் வான்வெளியில் முழு வான் கட்டுப்பாட்டையும் கைப்பற்றி, ஈரான் அரசுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தினோம். எங்கள் இலக்குகளை அடைந்ததை அடுத்து, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் போர்நிறுத்தத்திற்கான முன்மொழிவை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. அதே நேரத்தில் போர்நிறுத்தத்தின் எந்தவொரு மீறலுக்கும் இஸ்ரேல் வலுவாக பதிலளிக்கும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் போர் நிறுத்தத்துக்கு அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்ட நிலையில், ஈரான் அரசு தொலைக்காட்சி போர் நிறுத்தம் தொடங்கியதாக அறிவித்தது.

ஈரானின் அணு ஆயுத தளங்கள், ஏவுகணை மையங்கள் மீது கடந்த 13ம் திகதி ஒபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் சரமாரியான வான்வழி தாக்குதல் நடத்திய நிலையில், ஈரானும் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்திய அதேவேளை,அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால் மிகப்பெரும் போரை உலகம் எதிர்கொள்ளவிருக்கிறது என பெரும் அச்சம் சூழ்ந்திருந்த நிலையில், இரு நாடுகள் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கிறது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )