
இலங்கையில் மனித உரிமை சவால்களை எதிர்கொள்வதற்கு பரந்த பார்வை தேவை
மனித உரிமை சவால்களை எதிர்கொள்வதற்கான ஒரு பரந்த பார்வை தேவையெனவும், கடந்த காலத்தில் இடம்பெற்ற இனவாதம், வன்முறைகள் மற்றும் உள்நாட்டுப் போர் காரணமாக பாதிக்கப்பட்ட சமுதாயங்களிலும் மற்றும் மலையக பகுதிகளிலும் சமூக மற்றும் பொருளாதார மேம்பாடுகள் முன்னேற வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், நேற்று செவ்வாய்க்கிழமை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் பிற்பகல் 4.30 மணி முதல் 5 மணி வரையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நிஷாம் காரியப்பர், இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர் எஸ். சிறீதரன், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ரவி கருணாநாயக்க, தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர்களான மனோ கணேசன், இராதாகிருஷ்ணன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஜீவன் தொண்டமான், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது நாட்டின் மனித உரிமைகள் விடயங்கள் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கட்சி பிரதிநிதிகள் மனித உரிமைகள் ஆணையாளருடன் கலந்துரையாடினர். இதன்போது பிமல் ரத்நாயக்க அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க வேலைத்திட்டங்கள் தொடர்பில் குறிப்பிட்டதுடன், எதிர்க்கட்சித் தலைவரும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் முன்வைத்தனர். அத்துடன் மனோ கணேசன் மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் குறிப்பிட்டதுடன், வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் சிறீதரன் எம்.பியினால் ஆணையாளரிடம் கடிதமொன்று கையளிக்கப்பட்டது.
இதேவேளை யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழ் இன படுகொலை இடம்பெற்றதாக கூறியதுடன், இது தொடர்பில் சர்வதேச விசாரணைகள் அவசியமானது என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் நாமல் ராஜபக்ஷ தனது கருத்தை முன்வைத்து உள்ளக பொறிமுறையிலேயே விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர், நாட்டில் நிலையான நல்லிணக்கத்திற்கு அடிப்படையாக மக்களாட்சி வலுவூட்டல் மற்றும் அதிகாரப் பகிர்வின் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினார். வடக்கு, கிழக்கு மற்றும் மலைநாடு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது மாகாண பிரதிநிதிகள் ஊடாக அரசியல் அதிகாரம் செலுத்தும் உரிமையை பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் இங்கு முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் குறிப்பிட்ட மனித உரிமைகள் ஆணையாளர் மனித உரிமை சவால்களை எதிர்கொள்வதற்கான ஒரு பரந்த பார்வை தேவையென்பதை வலியுறுத்தினார். குறிப்பாக, கடந்த காலத்தில் இடம்பெற்ற இனவாதம், வன்முறைகள் மற்றும் உள்நாட்டுப் போர் காரணமாக பாதிக்கப்பட்ட சமுதாயங்களின், குறிப்பாக தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக மக்கள் வாழும் பகுதிகளில், சமூக மற்றும் பொருளாதார மேம்பாடுகள் முன்னேற வேண்டிய அவசியம் குறித்து அவர் சுட்டிக்காட்டினார்.
மனித உரிமைகள் தொடர்பான அணுகுமுறைகள் சமூகவியல் நுட்பத்துடனும், அளவீட்டு நேர்மையும், சமூக நீதி மற்றும் பூரணப் பங்கேற்பும் அடிப்படையிலானதாக இருக்கவேண்டும் என்றார்.