மகிந்த, மைத்திரி, ரணில், பசிலால் 211 கோடி ரூபாவை இழந்த அரசு

மகிந்த, மைத்திரி, ரணில், பசிலால் 211 கோடி ரூபாவை இழந்த அரசு

11 ஆயிரம் கறவை பசுக்களை இறக்குமதி செய்வதற்காக செலுத்தப்பட்ட முற்பணம் ஊடாக அரசாங்கம் 211 கோடி ரூபாவை இழந்துள்ளமைக்கு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸ மைத்திரிபால சிறிசேன,ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்டவர்களே பொறுப்பு. இந்த முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும். தகுந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் எம்.பி.யான நிஹால் கலப்பதி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற கறவை மாடு இறக்குமதி செயற்திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் ஐஐ ஆம் பகுதியின் கீழ் 15,000 கறவை மாடுகளை இறக்குமதி செய்வதற்கான முற்பணம் வழங்குதல் தொடர்பான 2025.05.21 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கை மற்றும் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான 2025.06.04 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவின் இரண்டாவது அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

தற்போது சுத்தமானவர்கள் போன்று அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் எதிர்க்கட்சியின் எம்.பி.க்கள் கடந்தகால ஊழல் மோசடிகளை மறந்து விட்டார்கள்.பல ஊழல் மோசடிகளுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் இன்று தூய்மையானவர்களை போன்று பேசுகிறார்கள்.

11 ஆயிரம் கறவை பசுக்கள் இறக்குமதி செய்வதற்காக செலுத்தப்பட்ட முற்பணம் ஊடாக அரசாங்கம் பாரிய நிதி மோசடியை எதிர்கொண்டுள்ளாக கணக்காய்வாளர் நாயகம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். எவ்விதமான முறையான தேசிய பெறுகையும், முறையான திட்டமிடலும் இல்லாமல் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. முறையற்ற வகையில் முற்பணம் செலுத்தப்பட்டதால் அரசாங்கம் 211 கோடி ரூபாவை இழந்துள்ளது.

இவ்வாறு 211 கோடி ரூபாவை இழப்பதற்கு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸ , மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ, மற்றும் முன்னாள் அமைச்சர்களான பி. ஹரிசன், விஜித் விஜேமுனி சொய்ஸா,லக்ஷமன் யாப்பா,லக்ஷமன் வசந்த பெரேரா, ஆகியோர் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும். எவரும் இந்த நிதி இழப்பு முறைகேட்டிலிருந்து தப்பிவிட முடியாது.

கடந்த காலங்களில் தேசிய பால் உற்பத்தி துறையை மேம்படுத்துவதற்காக கறவை பசுக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவை பாற்பண்ணையாளர்களுக்கு வழங்கப்படவில்லை. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் காலத்தில் கிராமிய அபிவிருத்தி என்று குறிப்பிட்டுக் கொண்டு இவ்வாறான பல மோசடிகள் அரச அனுசரணையுடன் இடம்பெற்றுள்ளன.

கடந்த கால ஆட்சியாளர்கள் மற்றும் அமைச்சர்கள்,அரசியல்வாதிகள் கறவை பசுக்கள் இறக்குமதியிலும் மோசடி செய்துள்ளார்கள். இந்த முறைகேடுகள் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும். தகுந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )