
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்; பல விடயங்களைக் கூறிய பிள்ளையான்
கொழும்பில் கட்டிடத்தில் ஸ்டிக்கர் ஒட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுடன் நேரடியாக தொடர்பில்லை ஆனால் பயங்கரவாதி சஹ்ரானுடன் தொடர்பு கொண்டிருந்த 25 பேருடன் இவருக்கு தொடர்புண்டு, அதேவேளை பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் பல விடயங்களை அவர் குறிப்பிட்டுள்ளார் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த
அவர் மேலும் பேசுகையில்,
1982 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வடக்கு மக்களின் தேர்தல் உரிமை கொள்ளையடிக்கப்பட்டு, யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. இதன் பின்னரே 30 வருடகால யுத்தம் தோற்றம் பெற்றது. 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரம் தூண்டிவிடப்பட்டது. இதன் பின்னர் மக்கள் விடுதலை முன்னணி தடை செய்யப்பட்டது.
ஜே. ஆர். ஜெயவர்தன – பிரேமதாச அரசாங்கம் இந்த நாட்டின் இளைஞர்களை படுகொலை செய்தது. இதில் பிரதானமானவொன்றாகத் தான் பட்டலந்த சித்திரவதை முகாம் உள்ளது. எதிர்க்கட்சிஎம்.பி.க்கள் இந்த சித்திரவதை முகாம் மற்றும் படுகொலைகளை நியாயப்படுத்த முயற்சிக்கின்றார்கள்.பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கையை போன்று அதனுடன் இணைந்த நான்கு பிரதான அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
முஜிபுர் ரஹ்மான் எம்.பி. முன்வைத்த விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம். கொழும்பில் உள்ள பிரதான வர்த்தக கட்டிடத்தில் வைத்து அண்மையில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த இளைஞனின் தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்கள் பரிசீலனை செய்யப்பட்டன.இந்த இளைஞனின் தொலைபேசியில் இருந்த தொலைபேசி இலக்கங்கள் பயங்கரவாதி சஹ்ரானின் போதனை வகுப்புகளில் பங்குப்பற்றியவர்களுடன் தொடர்புடையது என்று விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. அத்துடன் குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபருடன் இந்த இளைஞன் தொடர்பு கொண்டிருந்தமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இளைஞன் இயக்கிய யூடியுப் செயலியினை அந்த நிறுவனம் முடக்கியுள்ளது. இந்த இளைஞன் தவறான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இவரால் தேசிய பாதுகாப்புக்கும், பொது அமைதிக்கும் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் 2025.03.22 ஆம் திகதி கைது செய்யப்பட்டு 72 மணிநேர தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
இந்த இளைஞனுக்கு உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுடன் நேரடியாக தொடர்பிள்ளை. கொள்ளவில்லை. ஆனால் பயங்கரவாதி சஹ்ரானுடன் தொடர்புக் கொண்டிருந்த 25 நபர்களுடன் தொடர்பு கொண்டிருந்தவர்களுடன் இவருக்கு தொடர்புள்ளமை வெளிப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து தொடர்ச்சியான விசாரணைகள் இடம்பெறுகின்றன .
இந்த இளைஞன் தனிமையில் வாழ்ந்துள்ளதாக அவரது பெற்றோர் குறிப்பிடுகின்றனர். இவர் முறையாக மதக் கல்வியை பெறாமல், இணைய வழிமுறை ஊடாக மதக் கல்வியை பெற்றுக்கொண்டுள்ளார்.தன்னால் தற்கொலைதாரியாக மாற முடியும் எனவும் இவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த இளைஞனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலங்களில் பல விடயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த இளைஞன் இந்த விடயம் தொடர்பில் அத்தனகல நீதிமன்றத்தின் மன்னிப்பு கோரியுள்ளார். இந்த இளைஞனின் தந்தை தலைமறைவாகியுள்ளார்.இளைஞனின் வயது, எதிர்காலத்தை கருத்திற் கொண்டு அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.எனினும் .விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் பல விடயங்களை குறிப்பிட்டுள்ளார். அவரும் தொடர்புடையதாக குறிப்பிடப்படுகிறது. எந்த குற்றத்தையும் நா ங்கள் மூடி மறைக்க போவதில்லை என்றார்.
இதனைத் தொடர்ந்து எழுந்து கேள்வியெழுப்பிய முஜிபூர் ரஹ்மான் எம்.பி. , நீங்கள் தற்போது மாறுப்பட்ட விடயத்தை குறிப்பிடுகின்றீர்கள். இந்த இளைஞனை கைது செய்யது தொடர்பில் எங்கும் குறிப்பிட வேண்டாம். மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு செல்ல வேண்டாம் என்று பயங்கரவாத தடுப்பு பிரிவு அவரது பெற்றோருக்கு அழுத்தம் பிரயோகித்துள்ளது . கட்டிடத்தில் ஸ்டிக்கர் ஒட்டியதற்காகவே இளைஞரை கைது செய்தார்கள். அதன் பின்னரே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆனந்த விஜேபால, இந்த விவகாரம் குறித்து முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன . நீங்கள் தான் ஆரம்பத்தில் இருந்து மாறுப்பட்ட நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளீர்கள் என்றார்.