
தமிழரசை பிளவு படுத்தி இல்லாமலாக்க முயற்சி; பதில் தலைவர் சிவஞானம்
இலங்கை தமிழரசுக் கட்சியை பிளவு படுத்தி இல்லாமலாக்கும் முயற்சிகளை சில ஊடகங்கள் மேற்கொள்கின்றன. கடந்த 75 ஆண்டுகால வரலாற்றில் ஊழலற்ற மற்றும் எதற்கும் சோரம் போகாத பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரே கட்சியாக இலங்கை தமிழரசுக் கட்சி என அக்கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், தமிழரசுக் கட்சியை உடைப்பவர்களுக்கு தமிழரசு என்ற சொல் தேவைப்படுவதாகவும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தெற்கத்திய நிகழ்ச்சி நிரலுக்கு இணங்கியிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கல்விமான்கள், இந்தியாவிலுள்ள தமிழ் தேசிய உணர்வாளர்கள் , புலம்பெயர் தமிழர்கள் ஆகியோர் இணைந்து புதிய தமிழரசுக் கட்சியை உருவாக்கவுள்ளதாகவும் அதில் தற்போதைய தமிழரசுக்கட்சியின் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் பதில் தலைவராகவும் பதில் செயலாளராகவும் நானும் சுமந்திரனும் இருப்பது கட்சி யாப்பு அடிப்படையிலாகும். 1962 முதல் அமுலில் இருக்கும் யாப்பின் அடிப்படையிலேயே இந்த பதவிகளை வகிக்கிறோம். யாப்பில் குழறுபடிகளை மேற்கொண்டோ அல்லது திருத்தங்களை மேற்கொண்டோ இந்த பதவிகளை பெறவில்லை.
எங்கள் மீது மக்களிடையே பிழையான எண்ணத்தை பிரதிபலிப்பதற்கு இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன . இந்த தேர்தல் காலங்களில் வேற்றுகட்சித் தலைவர்கள் வெற்றி பெற வேண்டுமென்று நினைப்பவர்களும் இந்த வேலைகளை செய்வதாகவும் மக்கள் இந்த சூழ்ச்சிகளை புரிந்து கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் பெரும்பான்மையுடன் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியை தக்கவைக்கும் தகுதி இலங்கை தமிழரசுக்கட்சிக்கு இருப்பதாகவும் அவ்வாறு சில இடங்களில் பெரும்பான்மை பெறாவிட்டால் தமிழ் தேசியத்தை நேசிக்கின்ற கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது மாகாண சபை முறைமையை விரும்பாத போக்கையே பின்பற்றுவதாகவும் இதுவரை மாகாணங்களின் ஆளுநர்கள் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த அரசாங்கத்தில் ஆளுநர்கள் உள்வாங்கப்படவில்லையெனவும் தன்னுடைய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் அதில் உள்ளீர்த்து, தன்னுடைய பணியை நிறைவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது, இலங்கை தமிழரசுக் கட்சிக்கு அவரை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்குமென நம்புவதாகவும் இதன்போது மாகாண சபைகள் முறைமை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் அவருடைய கவனத்துக்கு கொண்டுவருவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் ரணில் விக்ரமசிங்க தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பட்டலந்த குற்றச்சாட்டு காலம் கடந்த விடயமானாலும் இந்த விடயம் தொடர்பான உண்மையை வெளிப்படுத்துவது நல்ல விடயமெனவும் வடக்கில் இது போன்று பல பட்டலந்த வதை முகாம்கள் செயற்பட்டதாகவும் அதற்கான விசாரணைகள் ஒருபோதும் எந்த அரசாங்கங்களாலும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.