
மூதூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தாக்குதலுக்குள்ளான நபர் திருமலை வைத்தியசாலை அனுமதி!
மூதூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தாக்குதலுக்குள்ளான குமாரபுரத்தைச் சேர்ந்த நபர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூதூர் பொலிஸாரினால் குமாரபுரம் பகுதியில் வைத்து 6 பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடையவரே கைது செய்யப்பட்டு பின்னர் பொலிஸாரினால் தாக்கப்பட்டதாக தெரிய வருகின்றது.
குறித்த நபர் மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது சனிக்கிழமை (08) பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
கிளிவெட்டி குமாரபுரம் பகுதியில் கடந்த மாதம் 24 ஆம் திகதி ஏற்பட்ட விபத்துச் சம்பவத்தின் பின்னர் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் தொடர்புபட்டார் என்ற சந்தேகத்தின்பேரில் தேடப்பட்டு வந்த குறித்த நபரே கடந்த வெள்ளிக்கிழமை (07) மூதூர் பொலிஸாரினால் குமாரபுரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
இதன்பின்னர் சட்டத்திற்கு முரணான வகையிலும், அடிப்படை உரிமையை மீறும் வகையிலும் தனது கணவர் தாக்கப்பட்டுள்ளதாகவும், தாக்கப்பட்ட தனது கணவனுக்கு நீதி கோரி அவரது மனைவியினால் வெள்ளிக்கிழமை (07) திருகோணமலை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதன் பின்னர் குறித்த அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டதுடன் மூதூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் கோரியுள்ளனர்.
கடந்த மாதம் 24 ஆம் திகதி குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தின் பின்னர் ஏற்பட்ட கைகலப்பின் காரணமாக தெகிவத்தை பகுதியில் இருந்து 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தமது கிராமத்திற்குள் நுழைந்து தாக்குதல் மேற்கொண்டிருந்ததாகவும் இதன்போது தமது கிராமத்தைச் சேர்ந்தவர்களும் தற்பாதுகாப்பிற்காக திருப்பி தாக்கியதோடு தப்பியும் ஓடினார்கள் என தெரியவந்துள்ளது.
இதன்போது அவ்விடத்திற்கு வருகை தந்த மூதூர் பொலிஸார் தெகிவத்தைப் பகுதியைச் சேர்ந்த 4 பேரையும், குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்ததுடன் இரு தரப்பிலும் சிலரை தேடியும் வந்தார்கள்.
பின்னர் இரு தரப்பினரும் சமாதானமான முறையில் இணக்கப்பாட்டுக்கு வந்த நிலையில் கடந்த மாதம் 28 ஆம் கைது செய்யப்பட்ட அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை (07) பாலர்பாடசாலையில் பிள்ளையை விட்டு திரும்பி வரும் வழியில் மூதூர் பொலிஸார் எனது கணவரை முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்று எனது கணவரின் தலை, கை, கால் ஆகிய பகுதிகளில் மிகவும் கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர்.
அத்துடன் 30 பேருக்கு மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் எமது ஊருக்குள் வந்து தாக்குதல் மேற்கொண்டபோதும் வெறும் 4 பேரை மாத்திரம் கைது செய்து பிணையில் விடுவித்தும் ஏனையவர்களை கைது செய்யாமலும் குமாரபுரம் மக்கள் மீது தமது அதிகாரத்தை பிரயோகித்து ஒரு பக்கச்சார்பாக பொலிஸார் நடந்து கொள்வதாகவும் திருகோணமலை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பொலிஸாரால் தாக்கப்பட்டவரின் மனைவி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.