
1987, 89 இல் அரச படைகளிடமிருந்து ஜே . வி.பி.யினர் கைப்பற்றிய 2136 ஆயுதங்களும் எங்கே?
1987, 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜே .வி.பி அரச படைகளிடம் இருந்து கைப்பற்றிய 2136 ஆயுதங்களை இன்றுவரை பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்கவில்லை. இந்த ஆயுதங்கள் எங்கே?ஜே .வி.பி.பாதுகாப்பு அமைச்சிட ம் கையளிக்காத ஆயுதங்களையா பாதாளக் குழுக்கள் தற்போது பயன்படுத்துகின்றன என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பினார்
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவினத் தலைப்பு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
1989.02.08 ஆம் திகதி தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தலதா மாளிகைக்கும், அதனையண்மித்த பகுதிகளுக்கும் தாக்குதல் நடத்தியவர்கள் இன்று கண்காட்சியை பார்வையிட அழைப்பு விடுக்கிறார்கள். இதனையே கர்மவினை என்று குறிப்பிட வேண்டும்.
தற்போது நாட்டின் தேசிய பாதுகாப்பு பிரதான பேசுபொருளாக மாறியுள்ளது . தேசிய பாதுகாப்பு தொடர்பில் விக்கிபீடியா மற்றும் கூகுள் ஆகியவற்றில் விடயங்களை ஆராய்ந்து அவற்றை தொகுத்து சபைக்கு வந்து ஒருசிலர் விசேட கூற்றை முன்வைக்கிறார்கள். நாட்டின் உள்ளக பாதுகாப்பை முதலில் உறுதிப்படுத்துவது தேசிய பாதுகாப்பின் அடிப்படை அம்சம் என்பதை அரசாங்கம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
புதுக்கடை நீதிமன்றத்தின் 9 ஆம் இலக்க அறைக்கு கொண்டுவரவிருந்த நபரை நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் 5 ஆம் இலக்க அறைக்கு கொண்டு வந்தது ஏன்? குறித்த சந்தேக நபரை 5 ஆம் இலக்க அறைக்கு கொண்டு வந்த போது அங்கிருந்த நீதவான் ‘ ஏன் இவரை இங்கு கொண்டு வந்தீர்கள்’ என்று பாதுகாப்பு தரப்பினரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுக்கடை நீதிமன்றத்துக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நீதிமன்றத்தின் உள்ளக தரப்பினர் தொடர்பு கொண்டிருக்கலாம் என்பதை அன்று குறிப்பிட்டேன்.சிறைச்சாலை மற்றும் பொலிஸார் அனைவரும் ஒன்றிணைந்தே குறித்த கைதியை நீதிமன்றத்துக்கு கொண்டு வந்துள்ளார்கள்.
புலனாய்வு அதிகாரிகள் தகவல் சேகரிப்பதற்காக பொதுமக்களுடன் மக்களாக இருப்பார்கள். தற்போது பாதாள குழுக்கள் பொலிஸ் தரப்புக்குள் புகுந்துள்ளது.இதுவே பாரதூரமான பிரச்சினை. பாதுகாப்பு வலயத்துக்குள் இந்நிலைமையே காணப்படுகிறது. புதுக்கடை நீதிமன்றத்துக்குள் நீதிபதியின் முன்னிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட ட போது நீதிபதி அச்சமடைந்து ஒளிந்துள்ளார்.இது கவலைக்குரியது.இதுவே இன்றைய நிலை இவற்றை பற்றி பேசும் போது தான் எமது வாய் அடக்கப்படுகின்றது.
இந்த நாட்டில் 30 வருடகால யுத்தம் நிலவியது. விடுதலைப் புலிகள் அமைப்புடன், புளொட், ஈரோஸ், ரெலோ , என பல குழுக்கள் செயற்பட்டன. இவர்களின் மத்தியில் பெருமளவான ஆயுதங்கள் பயன்பாட்டில் இருந்தன.யுத்தத்துக்கு பின்னர் இந்த ஆயுதங்கள் முறையாக பொறுப்பேற்கப்பட்டதா?, 1987,1989 ஆம் ஆண்டு கலவரத்தின் பின்னர் 1990 ஆம் ஆண்டளவில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகளுக்கமைய ஜே .வி.பி.(மக்கள் விடுதலை முன்னணி) பாதுகாப்பு தரப்பிடமிருந்து பல ஆயுதங்களை கைப்பற்றியுள்ளது தெரியவந்தது
பாதுகாப்பு அமைச்சின் தரவுகளுக்கமைய 1990 ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் ஜே .வி.பி.கைப்பற்றிய துப்பாக்கி, உட்பட 2136 ஆயுதங்கள் பாதுகாப்பு தரப்பிடம் மீண்டும் ஒப்படைக்கப்படவில்லை. அத்துடன் அரசாங்கங்களை அச்சுறுத்துவதற்காக ஜே .வி.பி. பல குழுக்களாக செயற்பட்டது.
ஜே .வி.பி.பாதுகாப்பு அமைச்சுக்கு கையளிக்காத ஆயுதங்களையா பாதாளக் குழுக்கள் தற்போது பயன்படுத்துகின்றனர்? தம்மிடமுள்ள 2136 ஆயுதங்களை ஜே .வி.பி. தமது அரசாங்கத்திடம் தற்போதாவது கையளிக்க வேண்டும் என்றார்