
பாதாளக் குழுக்கள் மோதிக் கொள்ளும் போது எதிர்க் கட்சிகள் ஏன் அச்சமடைகின்றன?
பாதாளக் குழுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும் போது எதிர்க் கட்சிகள் அச்சமடைகின்றன .பாதுகாப்பு கோருகின்றன .இதன்மூலம் பாதாள குழுக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் தொடர்புண்டு என்பதை எதிர்கட்சிகள் உறுதிப்படுத்துகின்றன என தேசிய மக்கள் சக்தியின் எம்.பி.யான லக்ஸ்மன் நிபுண ஆராய்ச்சி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம் பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 6 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில், .
மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சிகளை கணேமுல்ல சஞ்ஜீவவும், மித்தெனிய படுகொலையும் பாதுகாத்துள்ளன . இவ்விரு சம்பவங்களும் வேறு பட்டவை . ஆகவே இரண்டையும் ஒன்றிணைத்துக் கொள்ள வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளிடம் கோருகின்றோம்.
பாதாளக் குழுக்கள் மோதிக் கொள்ளும் போது எதிர்க்கட்சிகள் அச்சமடைகின்றன . பாதுகாப்பு கோருகின்றன பாதாள குழுக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் தொடர்புண்டு என்பதை எதிர்கட்சிகள் இதன்மூலம் உறுதிப்படுத்துகின்றன.
இந்த நாட்டில் பாதாள குழுக்கள் தோற்றம் பெறுவதற்கான சூழலை ஐக்கிய தேசியக் கட்சியே ஏற்படுத்தியது.1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரச சேவையாளர்கள் 10 ரூபா சம்பள அதிகரிப்பு கோரி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டார்கள்.அப்போது அரச சேவையாளர்களை அடக்குவதற்காக, ஜே.ஆர். ஜெயவர்தன சைக்கிள் சங்கிலியை கையில் வைத்துக் கொண்டு திரிந்த சண்டியர்களை பயன்படுத்தினார்.இதன் பின்னரே தான் பாதாள குழுக்கள் பல்வேறு வகையில் தோற்றம் பெற்றன.
எனினும் பாதாள குழுக்களை இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றார்.