
சட்டவிரோதமான கைதுகளே நடக்கிறது; உதய கம்மன்பில விசனம்
அநுரகுமார அரசால் தற்போது மேற்கொள்ளப்படும் கைதுகள் சட்டத்தின் பிரகாரம் இடம்பெறவில்லை. போலியாக கைது செய்து, விளக்கமறியலில் வைத்தால் அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வோம் என பிவிதுரு ஹெலஉருமயவின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி காரியாலயத்தில் பங்காளிக் கட்சி தலைவர்களுடன் சனிக்கிழமை நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
ஒவ்வொரு அரசுகளும் அரசியல் பழிவாங்கல்களையே முன்னெடுக்கின்றன. 2015ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசும் அரசியல் பழிவாங்கலை முன்னெடுத்தது.அவர்கள் ஆட்சியில் மஹிந்த ராஜபக்சவின் இளைய மகனான யோஷித்த ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு, 40 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.அவருக்கு எதிராக இன்று வரை வழக்குத் தாக்கல் இல்லை. யோசித்த ராஜபக்சவுடன் மட்டும் நின்று விடாது முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டு, 92 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அவருக்கு எதிராக இன்றுவரை வழக்குத் தாக்கல் இல்லை.
நல்லாட்சி அரசாங்கத்தில் ஊழல் எதிர்ப்பு குழுவின் செயலாளராக பதவி வகித்த ஆனந்த விஜேபாலதான் தற்போது இந்த அரசாங்கத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக உள்ளார்.
இவரே தற்போதைய அரசியல் கைதுகளுக்கு தலைமை வகிக்கின்றார். நல்லாட்சி அரசில் எத்தனை செய்தார்களோ தற்போது அதுதான் அநுரகுமார அரசில்இடம்பெறுகிறது. ஆனால் நாங்கள் இம்முறை இதற்கு இடமளிக்க மாட்டோம்.
போலியாக கைது செய்து, விளக்கமறியலில் வைத்தால் அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வோம். கைது செய்யப்படுவதை ஆரம்பத்திலேயே அறிவோம். எனினும் அதனை வெளிப்படுத்தவில்லை என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண விஜேசேகர தெரிவித்துள்ளார்.இதன்மூலம் தற்போதைய கைதுகள் சட்டத்தின் பிரகாரம் இடம்பெறுவதில்லை, அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டது என்பது பகிரங்கமாகியுள்ளது என்றார்.