
இலக்கினை நோக்கிய பயணம்
இயற்கையின் சீற்றத்திற்கும் இடையூறுகளுக்கும் மத்தியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி மாவீரர் நினைவேந்தலை நிகழ்த்தியிருக்கிறார்கள். தாயகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மாவீரர் நாள் சிறப்பாக கொண்டாடப் பட்டிருக்கிறது. கொட்டும் மழையையும் வீசும் காற்றையும் பொருட்படுத்தாது மாவீரர் துயிலுமில்லங்களில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மலர்தூவி, விளக்கேற்றி தமது வணக்கத்தை தெரிவித்தது மிகவும் உணர்வு பூர்வமாக இருந்தது.
கடந்த வருடங்களைப்போல, மாவீரர் நினைவேந்தலை நடத்துவதற்கென அரச இயந்திரத்துடன் போராட வேண்டி இருக்கவில்லை என்பது உண்மைதான். துளைக்கும் பார்வைகளும், பின் தொடர்தல்களும், கைதுகளும், விசாரணைகளும் ஏன் கைகலப்புகளும்கூட இம்முறை இடம்பெறவில்லை.
முற்கூட்டிய கைதுகளுக்கான உத்தரவுகளும் கிடைக்கவில்லை. நினைவேந்தலின் போதுகூட இராணுவப் புலனாய்வாளர்களோ பொலிசாரோ தட்டுப்படவில்லை. ஆயினும், மக்கள் முன்னெச்சரிக்கையுடன், அவதானமாக இருந்ததைப் பார்க்க முடிந்தது.
புலம்பெயர் தேசங்களில் மாவீரர் விழா சிறப்பாக நடைபெறுவது என்பது ஒன்றும் புதுமையானதல்ல. தாயகத்தில் இவ்வளவு எழுச்சியாக, பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டு தமக்காக உயிர் நீத்தவர்களுக்கு மலர்தூவி வணங்கியதும் ஈகச்சுடர் ஏற்றி வழிபட்டதும் தமிழ்த்தேசிய உணர்வு எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதை உலகறியச் செய்திருக்கிறது.
கடந்த சனாதிபதித் தேர்தலில் தமிழர்களில் ஒரு பகுதியினர் இப்போதைய சனாதிபதிக்கு வாக்குகளை வாரி வழங்கியிருந்தனர். அப்போது, இனி தமிழர்கள் போராட்ட உணர்வுடன் தமக்கான உரிமையைக் கேட்க மாட்டார்கள், இத்துடன் தமிழ்த் தேசியம் அழிந்தது என்று எழுதியவர்களின் எண்ணங்களுக்கு சாவுமணி அடித்திருக்கிறது இந்த மாவீரர் நாள்.
தமிழ் அரசியல் தரப்பு பக்கம் இருந்த வெறுப்பையும், புதிதாக வரும் சிங்களத் தலைமை எமது பிரச்சனைகளை எல்லாம் களைந்துவிடும் என்ற கடந்த கால வரலாற்றுத் தவறையும் ஒன்று சேர்த்து சனாதிபதி அனுரவுக்கு வாக்குகளை அளித்திருக்கிறார்கள் இந்தத் தமிழர்கள். ஆனாலும் யாரும் தடம் மாறிப் போகவில்லை என்பதற்கான எடுத்துக்காட்டு இந்த மாவீரர் நாள்.
நாங்கள் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்லர் என்பதை சிங்கள மக்கள் இப்போது புரிந்திருப்பார்கள். நாங்கள் உங்களுடைய உரிமைகளைப் பிடுங்கவில்லை. ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் உள்ள உரிமைபோல தமிழ்த்தேசிய இனத்துக்கும் உள்ள உரிமையை நீங்கள் தடுக்காதீர்கள் என்றுதான் கேட்கிறோம்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரைக்கும் ஓட்டுக் கேட்பது, கோசம் போடுவது என்று மட்டும் நின்றுவிட்டால் எம்மால் இலக்கினை அடைய முடியாது. மக்கள் தம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும். துறைசார் அறிவு வளர்க்கப்பட வேண்டும். மாவீரர் தினத்தில் மட்டுமல்லாது எல்லா நேரத்திலும் மக்கள் எழுச்சி கொண்டிருக்க வேண்டும். ஒன்றாகச் சேர்ந்து ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களில் இறங்க வேண்டும். சட்டவிரோத செயல்களுக்கு எதிர்ப்பைக் காட்ட வேண்டும்.
எமது பலமும் ஒன்றிணைந்த செயற்பாடுகளும்தான் சர்வதேசத்துக்கு எமது போராட்டத்தின் நியாயத்தன்மையை வெளிப்படுத்தும். எத்தனையோ தடைகளைக் கடந்து வந்தவர்கள் நாங்கள். வருங்காலத்திலும் வழியெங்கும் தடைகள் வரலாம்.
கடந்த காலத்தில் எமது அரசியல்வாதிகள் சுயநலத்தோடு காலத்தை வீண்டித்தது போல நாம் இருக்க முடியாது. தாங்கள் சுமந்த கனவுகளை எங்கள் தோள்களில் இறக்கி, மீளாத்துயில் கொள்ளும் மாவீரர்களின் கனவை நாம் நிறைவேற்ற வேண்டும். எமது ஆளுமையை வளர்த்துக் கொள்வோம். ஓரணியில் திரள்வோம். எத்தடை வரினும் அவற்றைத் தகர்த்து இலக்கு நோக்கி நகர்வோம் என்று உறுதி பூணுவோம்.