மக்கள் எழுச்சிகொள்ளட்டும்

மக்கள் எழுச்சிகொள்ளட்டும்

சனாதிபதி தேர்தலில் ‘பொதுவேட்பாளர்’ இறக்கப்பட்ட பின்னர்தான் தமிழர்களைப் பொறுத்தவரை தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தமிழர் ஒருவர் சனாதிபதியாக வரும் சாத்தியம் இல்லாதிருப்பதால் வெற்றிபெறும் நிலையிலுள்ள சிங்களர் ஒருவருக்கு வாக்களித்து, அவரை சனாதிபதியாக்கி, பின்னர் தமிழர்களின் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என்று பிதற்றும் மூடர்கள்கூட இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அதே சமயத்தில் பொது வேட்பாளர் விலகவேண்டும் என்று கஜேந்திரன் தரப்பு கூவிக் கொண்டிருக்கின்றது. எமது கொள்கைக்கும், மாவீரர்களின் தியாகத்திற்கும் களங்கம் விளைவிக்கிறார்கள் என்று அவர்கள் கூசாமல் பிரசாரம் செய்கிறார்கள். தேர்தலைப் பகிஷ்கரிப்பதால் சிங்களர் எதிர்பார்த்த பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காமல் போகும் என்று அடிப்படை அரசியல் அறிவுகூட இல்லாமல் பேசுகிறார்கள்.

தமிழ்த்தேசிய உணர்வை வெளிக்காட்டுவதற்காக களமிறங்கியுள்ள பொது வேட்பாளர் தமிழ்த் தேசியத்தின் குறியீடாக, தமிழர்கள் ஒரு தேசிய இனமாகத் திரண்டிருப்பதன் வெளிப்பாடாக உலகிற்குக் காட்டப்படுவார் என்பது தமிழ் மக்களுக்கு தெளிவாக விளக்கப்பட்டு விட்டது. தமிழர்களின் வாக்குகள் தமிழர் ஒருவருக்கு போடப்படும் அதே நேரம், எந்த சிங்கள வேட்பாளரும் 50% இற்கும் மேற்பட்ட வாக்குகளை எடுக்க முடியாத நிலை உருவாக்கப்படும். இதனால் எமக்கான உரிமையை எமது வாக்குகளை வைத்து அதிகாரத்துடன் கேட்கக்கூடிய ஒரு நிலை உருவாக முடியும்.

அதே சமயத்தில் தேர்தலை பகிஷ்கரிப்பது என்பது சிங்கள வேட்பாளனுக்கு எளிதாக 50% வாக்குகளை பெற்றுக் கொடுத்துவிடும். வாக்குகளின் வீதம் என்பது போடப்பட்ட வாக்குகளை வைத்தே கணக்கிடப் படுகிறது. போடப்படாத வாக்குகள் கணக்கில் வராது. இதனால் நாம் ஒட்டுமொத்தமாக பொது வேட்பாளருக்கு வாக்களிக்கும்போது அது நிச்சயமாக சிங்கள வேட்பாளரின் வாக்கு எண்ணிக்கையை பாதிக்கும்.

சஜித் கட்சியில் உள்ள முக்கிய பிரமுகரான உமாசந்திரா பிரகாஷ் என்பவர் ‘பொதுவேட்பாளரை மதித்து அவரது இனத்தவர்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். அதே சமயம் இரண்டாவது வாக்கை சஜித்துக்கு அளித்து மாற்றத்தை உருவாக்குங்கள்’ என்று கேட்டிருந்தார். ‘பொது வேட்பாளர்’ என்ற பதம் சிங்கள வேட்பாளர்களினுள் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

அதே சமயத்தில் இரண்டாவது வாக்கு என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை. தமிழர்கள் பொது வேட்பாளருக்கு மட்டுமே வாக்களிப்பார்கள்… வாக்களிக்க வேண்டும்.
கடந்த தேர்தல் காலங்களில் தமிழர்கள் தேர்தலை பகிஷ்கரிப்பதை ஏற்றுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு தலைமையிருந்தது. தமிழர்களின் அரசியல் நிலைப்பாடு வேறாகவிருந்தது. நாங்கள் அதிகாரத்துடன் கேட்கும் நிலையிலிருந்தோம். அந்தக் காலத்திற்கு அது பொருத்தமானதே.

பின்வந்த காலங்களில், எங்களை இனப் படுகொலைக்கு உள்ளாக்கியவருக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்ற வெறுப்பில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இரண்டாம் இடத்தில் இருந்தவருக்கு எங்கள் வாக்குகளைக் கொடுத்து வஞ்சம் தீர்த்துக் கொண்டோம். ஆட்சிக்கு வந்த பின்னர்தான் வந்தவரும் இனக் கொலையாளிதான் என்று பட்டுத் தெரிந்து கொண்டோம்.

தமிழ் மக்கள் இனியும் அந்தத் தவறுகளைச் செய்வதாக இல்லை. தமிழர்களின் அரசியலில், எதிர்ப்பு அரசியல் செய்பவர்கள் ஒருபுறம். இவர்கள் அங்கொன்று இங்கொன்றாக போராட்டங்கள் நடத்துவதுடன் சரி. அடுத்த கட்ட நகர்வுக்கான எந்த திட்டமிடுதல்களும் இங்கு இருப்பதாகத் தெரியவில்லை.

சனாதிபதி தருவார் என்று அவர் போடும் எலும்புத் துண்டுகளைப் பொறுக்கிக்கொண்டு, அறிக்கைகள் விட்டு வருடங்களைக் கடத்தும் அரசியல்வாதிகள் மறுபுறம். எந்த அதிகாரங்களும் இல்லை என்று தெரிந்தும், ’13 ஐ தர சனாதிபதி தயாராக இருக்கிறார்.. காணி, பொலிஸ் அதிகாரங்கள் பற்றித்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’ என்று கொழும்பிலிருத்து கூப்பாடு போடும் இவர்களை சிங்கள அரசியல்வாதிகளின் இரவுப் பார்ட்டிகளில் காணலாம்.

இத்தனை வருடகாலம் எங்களுக்கு எந்தத் தீர்வையும் பெற்றுத் தராத அரசியலை விடுத்து, புதியதோர் பாதையில், சனநாயக வழியில் எமது இலக்கை அடையும் வழியாக பொது வேட்பாளரை முன்னிறுத்தியது அமையலாம். போர் முடிவுக்கு வந்து பதினைந்து வருடங்கள் கடந்து விட்டன. சனநாயக வழியில் எமது போராட்டத்தை நகர்த்திச் செல்வதற்கான எந்தவொரு ஆக்கபூர்வமான செயற்பாடுகளும் நடைபெறவில்லை. இத்தனை வருடங்களுக்குப் பிறகு, தமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை மறந்து பெரும்பாலான கட்சிகள் பொது வேட்பாளருக்கு தமது ஆதரவைத் தெரிவித்திருப்பது ஒரு வரவேற்கத்தக்க விடயம்.

இந்த ஒற்றுமை நீடிக்க வேண்டும். முழங்கும் சங்கிற்கு ஏகோபித்த ஆதரவை வழங்கி பொது வேட்பாளரை வெற்றிபெறச் செய்வதானது தமிழ்த் தேசியத்தை, எங்கள் ஒற்றுமையை உலகறியச் செய்வதாகும்.
ஒன்றுபடுவோம்! சங்கிற்கு வாக்களிப்போம்!

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )