‘பொது வேட்பாளர்’ நடைமுறைச் சாத்தியமா?

‘பொது வேட்பாளர்’ நடைமுறைச் சாத்தியமா?

கடந்த 2010 இல் மு. திருநாவுக்கரசு அவர்களால் பிள்ளையார் சுழி போடப்பட்ட ‘தமிழர்களுக்கான பொது வேட்பாளர்’ என்கின்ற கோட்பாடு அன்றிலிருந்து ஒரு பேசுபொருளாக உள்ளது. ஆனாலும் ஆரம்பத்தில் முதல் இரு தேர்தற் காலங்களிலும் எவராலும் பெரிதளவில் கருத்தில் எடுக்கப்படவில்லை. அதனைப் பரீட்சித்துப் பார்த்த குமார் பொன்னம்பலம், சிவாஜிலிங்கம் போன்றவர்களும் அதன் முழு தார்ப்பரியத்தையும் புரிந்து கொள்ளாமல் நடைமுறைப்படுத்த முனைந்து தோல்வியைத் தழுவிய வரலாற்றை ஞாபகப்படுத்தாமல் பொது வேட்பாளர் என்ற பதம் ஆராயப் பட்டதுமில்லை.
2019 இல் நடந்த தேர்தற் காலத்தில் கொஞ்சம் மாறுபாடாக தமிழ் மக்கள் பேரவை ஒரு சுயாதீனக் குழுவை உருவாக்கி, அதன் மூலம் பொது வேட்பாளரை தேர்தலில் நிறுத்தலாம் என்றது. ஆனால் தமிழ்க் கட்சிகள், முக்கியமாக தமிழரசுக் கட்சி அதனை ஏற்றுக் கொள்ளாததால் அது அங்கேயே கை விடப்பட்டது.
இப்போது, தேர்தல் அறிவிப்பு வருவதற்கு சிறிது காலத்தின் முன்பே சுரேஷ் பிரேமச்சந்திரன் பொது வேட்பாளரை நிறுத்தி தமிழர் வாக்குகளைத் திரட்ட வேண்டும் என்று மொழியத் தொடங்கி விட்டார். அதற்கு ஐயா விக்கினேஸ்வரன் அவர்களின் பூரண ஆதரவும் கிடைத்தாயிற்று. சுமந்திரன் அவர்களுக்கு பொது வேட்பாளர் என்ற திட்டத்தில் உடன்பாடில்லை. அது சரி வருமா என்பதல்ல அவரின் பிரச்சனை. ‘மக்கள் எங்களைத் தெரிவுசெய்தார்கள். நாங்கள்தான் மக்களின் நலனிற்கான வழியை முடிவு செய்ய வேண்டும். கட்சி அரசியலே சிறந்தது’ என்பது அவரது தனிப்பட்ட பார்வை.
சம்பந்தன் ஐயாவோ ‘கழுவுகிற மீனில் நழுவுகிற மீன்’. சிங்கள மக்களை கோபமடையச் செய்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பவர். இப்போது ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி பொது வேட்பாளரை நிறுத்துவது உறுதி என்ற முடிவை சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடாக அறிவித்து விட்டது. ‘மக்கள் மனு’ என்னும் சிவில் அமைப்பு ஒன்று இதற்கான பரப்புரையை நடத்துகிறது. இப்போது வேட்பாளரை கிழக்கிலிருந்து தெரிவு செய்யலாமா என்று ஆலோசிக்கப் படுவதாகவும் அறிய முடிகிறது. இது அவ்வளவு இலகுவான காரியமல்ல.
இதுவரை காலமும் தமிழ் மக்கள் தேர்தற் புறக்கணிப்பு அரசியல் செய்து வந்தார்கள் அல்லது ஒரு துரோகியை வீழ்த்துவதாக எண்ணி இன்னொரு துரோகிக்கு வாக்களித்து அவனை பதவிக்கு கொண்டு வர உதவி புரிந்தார்கள். இதனால், தமிழ் மக்களின் வாக்குகள் மொத்தத்தையும் ஒரு பொது வேட்பாளர் மூலம் திரட்டி, ஒரு தேசியமாக உயர்ந்து நிற்பது என்பது நல்ல விடயம்தான்.
‘பொது வேட்பாளர்’ என்பவர் தமிழ் ஐக்கியத்தின் குறியீடு. அவர் தமிழர்களின் வாக்குகளை ஒன்றாகத் திரட்டுபவர். இதனால் அவர் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவராக இருக்க வேண்டும். அனைத்து தமிழ்க் கட்சிகளும் அவருக்கு தமது ஆதரவை வழங்க வேண்டும். அதே சமயத்தில் இவர் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதியும் அல்லர். அவர் தன்னிச்சையாக எந்த சிங்கள கட்சியுடனும் பேரம் பேசுபவராகவும் இருக்கக் கூடாது. தமிழர்களின் அதியுச்ச கோரிக்கைகளை அவர் தனது கோரிக்கையாக கொண்டிருப்பார்.
இந்தப் பொது வேட்பாளர் சுயநலமற்றவராகவும் இந்தத் தேர்தலில் அவருக்கு கிடைக்கும் பிரபல்யத்தை அவர் தனக்காக எங்கும் பயன்படுத்தாதவராகவும் இருப்பது அவசியம். அப்படிப்பட்ட ஒருவரைக் கண்டுபிடித்து வேட்பாளராக்க வேண்டும்.
பொது வேட்பாளர் என்று வெறுமனே அறிக்கை விடுவதோ அல்லது சில கூட்டங்களை நடத்துவதோ வெற்றி தராது. அதற்கு உழைக்க வேண்டும். வீடு வீடாகச் சென்று பேசவேண்டும். மக்களை தேசிய எழுச்சி கொள்ள வைக்க வேண்டும். வடக்கில் உள்ள மக்களின் அரசியல் தன்மை வேறு, கிழக்கில் வேறு. இரண்டையும் ஒரே முறையில் அணுக முடியாது வடக்கிலுள்ள மக்கள் சாதகமான நிலையில் இருந்து (comfort zone) அரசியல் பேசுவார்கள். கிழக்கு வாழ் மக்கள் இருவேறு சமூகங்களுக்கு மத்தியில் தப்பி உயிர்வாழ போராடிக்கொண்டு (survival zone) அரசியலை முன்னெடுப்பார்கள். இதனால் மக்களுக்கு இடையில் இறங்கி வேலை செய்து, அவர்களின் மனங்களை வென்று ஒரு தேசியமாகத் திரட்டுவது என்பது இந்தத் தேர்தலுக்கிடையில் சாத்தியமில்லை.
‘பொது வேட்பாளர்’ என்ற பேச்சினால் அச்சமடையும் சிங்கள பிரதிநிதிகள் தங்களுடன் பேரம் பேச வருவார்கள் என்பதுதான் தமிழ்க் கட்சிகளின் நோக்கம் என்பது மக்களில் ஒரு சாராரின் எண்ணம். வழமைக்கு மாறாக சிங்கள பிரதிநிதிகள் தமிழர் பகுதிகளில் கீழ் மட்டத்துக்கு இறங்கி பேசியதும் வாக்குறுதிகள் வழங்கியதும் இது சரிதானோ என்று எண்ணவும் வைக்கிறது.
எது எப்படியிருப்பினும் இம்முறை தேர்தலில் ‘பொது வேட்பாளர்’ சாத்தியமேயில்லை. இப்போதே இறங்கி வேலை செய்ய ஆரம்பித்தால் அடுத்த தேர்தலில் சாத்தியமாகினாலும் ஆகலாம். இடையில் ரணில் ஐயா தனது பதவிக் காலத்தை நீடிக்க செய்யும் பகீரதப் பிரயத்தனம் வெற்றி பெற்றால்….? தேர்தல் நடக்க வாய்ப்பிருக்காது. இவ்வளவு விவாதங்களும், விமர்சனங்களும், கூட்டங்களும், அறிக்கைகளும் வீணாகிவிடும்.
நடக்காத திருவிழாவிற்கு பந்தல் போடுகிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )