
இலக்குகள் எட்டப்படும்
மே மாதம் ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரையில் வலி மிகுந்த மாதம். உலகின் எந்த மூலையில் இருந்தால் என்ன, தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனவழிப்பை ஞாபகத்தில் கொண்டு இறந்தவர்களுக்கு அஞ்சலி செய்யாத தமிழனே இருக்க மாட்டான்.
குற்றுயிரும் குலையுயிருமாக கதறித் துடித்த மக்களின் மீது குண்டுகளை சரமாரியாக வீசி, வன்னிப் பிராந்தியம் எங்கும் ஓட ஓட விரட்டிய சிங்கள அரசு குழந்தைகள், முதியவர், கர்ப்பிணிகள், நோயாளிகள் என்று எந்த வேறுபாடும் பார்க்காமல் சகட்டு மேனிக்கு கொன்று குவித்ததை ஈழத்தமிழர்களால் மறந்துவிட முடியுமா? அல்லது முள்ளிவாய்க்கால் என்ற சிறிய நிலப்பரப்புக்குள் இறுதியாக அடைக்கலம் புகுந்திருந்த இலட்சக்கணக்கான மக்களை கோரமாகக் கொன்று குவித்து அந்தப் பிராந்தியம் முழுவதும் பிணக் குவியலாக்கியதைத்தான் மன்னிக்க முடியுமா?
இந்த இனவழிப்பு அரங்கேறி பதினைந்து வருடங்கள் கடந்து விட்டன. இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான தமிழ் மக்களுக்கான நீதி இன்றுவரையும் கிடைத்தபாடில்லை. யுத்தம் முடிவடைந்தது என்று அறிவிக்கப்பட்ட பின்னர் கைதாகிய, ஒப்படைக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கானோரின் நிலை என்னவென்பதும் வெளிவந்த பாடில்லை. இந்த இனவழிப்பில் அகப்பட்டு, சித்திரவதைகளை அனுபவித்து, தப்பி நடைப்பிணங்களாக வாழ்பவர்களின் வலியும் வேதனையும் சொல்லில் அடங்காது.
தம்மிடமிருந்து பறிக்கப்பட்ட இலட்சக்கணக்கான உயிர்களை நினைவு கூருவதற்கான உரிமை எல்லா இனத்துக்கும் இருப்பதுபோல எங்களுக்கும் உண்டு. இப்படியான நினைவேந்தல்களை நடத்தும் உரிமை பாதிக்கப்பட்ட இனத்துக்கு உண்டு என்பதை ஐக்கியநாடுகள் சபையும் அங்கீகரித்துள்ளது.
நினைவேந்தல்கள் கொல்லப்பட்டவர்களுக்கான அஞ்சலியாக மட்டுமல்லாது இனப் படுகொலையின் வரலாற்றுச் சாட்சியங்களாகவும் அமைகின்றன.
உலகெங்கும் பரந்திருக்கும் ஈழத்தமிழர்களும் எங்கள் இனத்தின் மனதில் அழியாது நிலைத்து நிற்க வேண்டிய இந்தப் படுகொலையை நினைவு கூர்வது கடந்த பதினைந்து வருடங்களாக தொடர்கின்றது. இந்த இனவழிப்பை படுகொலை வாரமாக துக்கம் அனுஷ்டிப்பதும், முள்ளிவாய்க்கால் கஞ்சி அருந்தி அத்தனை துன்பங்களையும் மீண்டும் மீண்டும் ஞாபகத்தில் கொண்டுவந்து அந்த வலியை புதிதாக அனுபவிப்பதும் வரலாற்றை பேணிப் பாதுகாக்கும் தமிழினத்தின் கடமை. அப்போதுதான் அடுத்த தலைமுறையும் அத்தனை வலிகளையும் உணர்ந்து கொள்ளும்.
இந்த தார்மீக உரிமையை தரமறுக்கும் சிங்கள இனவாத அரசு இந்த வருடமும் கஞ்சி வழங்கியவர்களை கைது செய்து தனது துவேசத்தை வெளிப்படுத்தியுள்ளது. கிழக்கின் சம்பூர், பாண்டிருப்பு பகுதிகளில் நீதிமன்ற தடையுத்தரவுடன் வந்த காவற்துறையினர் கஞ்சி தானத்தை தடுத்திருக்கிறார்கள்.
எத்தனை தடைகள் போடப்பட்டாலும் அவை அனைத்தையும் மீறி தாயகத்திலும், புலம் பெயர் தேசங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக நடத்தப்பட்டிருக்கின்றன.
பொது சுகாதாரத்திற்கு கேடு என்று சப்பைக்கட்டு கட்டி கஞ்சி தானத்தையும் மக்கள் ஒன்று கூடுவதையும் தடுக்கின்ற சிங்களம், மே தினத்தில் அணி திரண்ட பேரணியைத் தடுக்கவுமில்லை வெசாக் உணவு தானத்திற்கு தடை விதிக்கவுமில்லை. இரு இனங்களுக்கிடையிலும் புரிந்துணர்வு ஏற்பட்டு நல்லாட்சி மலர உறவுக்கரம் நீட்டுகிறோம் என்பவர்கள் இறந்தவர்களுக்கு நினைவேந்தல் செய்யவும் தடைபோடுகிறார்கள் என்றால்…. அந்த உறவு எந்தக் காலத்திலும் மலரப் போவதில்லை.
இலங்கையில் பிரபல்யமான பாதணி உற்பத்தி நிறுவனமான DSI கார்த்திகைப்பூ படம் பொறித்த செருப்புகளை விற்பனைக்கு விட்டு மன்னிக்க முடியாத கீழ்த்தரமான வேலையை அதுவும் தமிழர்கள் துக்கம் அனுட்டிக்கும் நேரத்தில் செய்துள்ளது. கார்த்திகைப்பூ தமிழர்களின் வாழ்வியலில் எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கிறது என்பது உலகம் பூராவும் அறிந்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளரான பெரும்பான்மை இனத்தவருக்கு அது தெரியாதா?
தமிழர்களின் துக்க காலத்தில் சிங்களம் எப்படி இனவாதம் கக்குகிறது என்று பாருங்கள். கார்த்திகைப் பூ சின்னம் வைத்திருந்தவர்கள், சின்னம் பொறித்த தொப்பி, உடை அணிந்தவர்கள் என்று தேடித்தேடி கைது செய்யும் சிங்கள காவற்துறையும் நீதித்துறையும் DSI நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? இவர்கள் கூட்டாக இயங்குவது வெளிப்படையாகத் தெரிகிறது அல்லவா?
உங்களை எங்கள் கால்களின் கீழேதான் வைத்திருப்போம் என்று சொல்லாமல் சொல்லும் இந்தச் சிங்கள நிறுவனத்தின் உற்பத்தியை தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து புறக்கணிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல், தமிழர்களை புண்படுத்துவதற்காக விற்பனைக்கு விடப்பட்ட அத்தனை பாதணிகளையும் அந்த நிறுவனம் மீளப் பெற நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும்.
யுத்தம் முடிவடைந்திருக்கலாம். ஆனால், எங்களுடைய பிரச்சனைகள் அப்படியேதான் இருக்கிறன. எங்களுக்கான தீர்வுகள் எட்டப்படும்வரை நாங்கள் போராடித்தான் ஆகவேண்டும். போராட்ட வடிவம்தான் வேறு. தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்கும்வரை இலக்குகள் எட்டப்படுவதை யாராலும் தடுக்க முடியாது.

