வடக்குக் கடலில் என்ன நடக்கிறது?

வடக்குக் கடலில் என்ன நடக்கிறது?

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்கின்றது ,வெளிநாட்டு பிரஜைகள் சிலர் தொண்டமனாறு கடற்கரையில் நின்று ட்ரோன் மூலம் வீடியோ எடுக்கிறார்கள் , அதே போல் முல்லைத்தீவில் ரோஹிங்கியா படகு கரையொதுங்கும் வரை கடற்படைக்குத் தெரியாது போயுள்ளது. இவ்வாறு வெளிநாட்டவர் எமது கடலில் என்ன செய்கிறார்கள் என்று அவதானிக்க முடியாதவர்கள் கிளீன் சிறீலங்கா பற்றிப் பேசி பிரயோசனமில்லை என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத்தின் உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

புதிய கடற்றொழில் அமைச்சர் ஐரோப்பிய நாடுகளுடன் பேச வேண்டும் என்று கூறுகிறார். இது வரை எந்த அமைச்சரும் இவ்வாறு பேசியதில்லை. இது எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளை கூட்டி வந்து கடலை கூறுபோட்டு விற்கப்போகிறார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளை அழைத்து எமது கடல் வளத்தை விற்கப்போகிறீர்களா?

இது தொடர்பில் எமது கடற்றொழில் அமைப்புக்கள் மெளனமாக உள்ளது பேராபத்தானது. அமைச்சரின் இந்தக் கூற்று பற்றி பேச வேண்டும்.

கிளீன் சிறிலங்கா என்று ஒன்றைத் தொடங்கியுள்ளீர்கள், இதில் என்ன நடக்கிறது? எமது நாட்டில் கொண்டுவரப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்தி சட்டத்தை நிரூபியுங்கள். இது தான் கிளீன் சிறிலங்கா. அதைவிடுத்து சுற்று நிரூபங்களை விடுவதால் மட்டும் பலனில்லை. சட்டத்தையும் சுற்று நிரூபங்களையும் நடைமுறைப்படுத்துங்கள் எல்லாம் கிளீனாகும்.

பாராளுமன்றில் ரவிகரன் எம்.பி.மீனவர்கள் சார்பில், இந்திய மீனவர்களினால் ஏற்படும் பிரச்சினை பற்றி பேசியுள்ளார். அதை வரவேற்கிறோம்.பேச்சோடு நின்று விடாமல் தொடர்ந்து நடைமுறைக்கு கொண்டு வாருங்கள்.

பல தமிழ் அரசியல் கட்சிகளிடமும் பாராளுமன்ற பிரதி நிதிகளிடமும் பல ஆவணங்களைக் கையளித்தோம் ஒன்றும் நடக்கவில்லை. தமிழ் அரசியல் வாதிகள் துப்புக்கெட்டவர்கள்.

கடற்றொழில் தொடர்பில் பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதை நடைமுறைப்படுத்த தொடர்ந்தும் பாராளுமன்றில் குரல் எழுப்புங்கள்.

அடுத்து தைப்பொங்கள் வருகிறது நாம் கடலுக்குள் செல்ல முடியாத நிலையுள்ளது. இந்திய மீனவர்களது றோலர் படகுகள் எமது கடலில் வளங்களை அள்ளி எமது கடல் வளம் நாசமாகிறது.

இப்போது வந்த அரசும் அமைச்சரும் நல்ல விடயங்களைப் பேசுவார்கள் நடைமுறைப்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்தால் அவர்களது செயல்களும் கதையளவிலேயே உள்ளது.

எமது கடற்பரப்பில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட மீனவர்கள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை உடன் தடுக்க வேண்டும். இங்கிருக்கும் உள்ளூர்ச் சங்கங்கள் ஏன் வெளி மாவட்ட மீனவர்களுக்கு ஒரு நடமுறையையும் உள்ளூர் மீனவர்களுக்கு ஒரு நடைமுறையும் கொண்டுள்ளீர்கள்.

வெளி மாவட்ட மீனவர்களுக்கு உள்ளூரில் அனுமதியை வழங்குவதால் கஞ்சா கடத்தல் உட்பட போர்க் காலத்தில் கடலில் மூழ்கிப் போயுள்ள கடற்படையினரதும் விடுதலைப் புலிகளதும் கப்பல்கள், படகுகளின் பாகங்களை திருடிச் செல்ல வழி திறந்து விடப்பட்டுள்ளது.

கடல்வளம் வெளி மாவட்ட மீனவர்கள், சட்ட விரோத தொழில் முறைகள், இந்திய மீனவர்களின் அத்து மீறல்களால் அழிக்கப்படுகிறது, நாசம் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )