
இயற்கை!!
(பொழில்)
கண்களுக்கு மட்டுமா
பெரு விருந்து?
சுத்தக் காற்றை
சுவாசிக்கக் கொடுக்கும்
மா மருந்து!!
மாரி மழையும்
கோடை இடியும்
குறையறக் கொடுக்கும்
கொடையாளி!!
பறவைகளுக்கு சரணாலயம்…!!
பசித்தோருக்கெல்லாம்
புசிக்கக் கொடுக்கும்
அட்சய பாத்திரம்!!
தூளியாடவும்… தூணாகவும்…
நிழல் தருவதாகவும்….
பச்சிலையாகவும்…
பயன்களோ பல்லாயிரம்!!
சிந்தை தொலைத்தான்
மனிதன்!!
விந்தை புரிவதாய் எண்ணி
சித்தம் குழம்பினான்….
விஞ்ஞானத்தின் அதீத வளர்ச்சி – என்று
அசுத்தக் காற்றால்
அண்டத்தை நிரப்பினான்!!
இயற்கையை உழுது…
கட்டடக் காடுகள் கட்டித் தொலைத்தான்.
நிம்மதியையும்
சேர்த்துத் தொலைத்தான்!!
காலம் தப்பிய பருவநிலைகளும்…
வெள்ளப் பெருக்கும்,
தண்ணீருக்கே தவிக்கும் நிலையும்…
தகிக்கும் தரணியும்….
சுற்றுச் சூழலைச்
சேதம் செய்ததால்
கண்ட பலனெனக் கண்டுகொண்டோம்.
ஆகாய வெளியை
அளக்கத் தெரிந்தவன்
பிண்டமும் இல்லாப்
பெரு வியாதியை
கண்டு நடுங்கும்
காலம் வந்தது!!
உருவமில்லா ‘வைரஸ்’
உருமாறி மாறி
உலகை உலுப்புவதும்…
காலம் தவறிய மரணங்கள்
நிகழ்வதும்….
மானிடன் விதைத்த
விதையன்றி
வேறென்ன??
முக்காடு போட்டு முகத்தை மூடி
எக்காலமும் வாழும்
வாழ்வும் வாழ்க்கையா….?
இயற்கையோடிணைந்து
வாழ்ந்த காலத்தில்
நோயற்ற வாழ்வு எமக்கிருந்தது….!
மட்டற்ற மகிழ்ச்சி
மனதில் இருந்தது…!
குழந்தைகள் வாழ்வு
குதூகலமாயிருந்தது!!
இப்போதும் காலம் கடந்து விடவில்லை…..
இயற்கையை நேசிப்போம்….!!
பூசிப்போம்…..!!
கடினம்தான்..ஆயினும்
செயற்கையை
முடிந்தவரை தவிர்ப்போம்….
சுத்தத்தைப் பேணுவோம்…. சூழலைக் காப்போம்…..

