முள்ளிவாய்க்காலில் 102 பேருடன் கரையொதுங்கிய மியன்மார் படகு

முள்ளிவாய்க்காலில் 102 பேருடன் கரையொதுங்கிய மியன்மார் படகு

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரையொதுங்கிய படகில் இருந்த 100க்கும் மேற்பட்ட மியன்மாரின் ரோஹிங்கியா அகதிகளை திருகோணமலைக்கு கொண்டு செல்ல கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பகுதியில் நேற்று வியாழக்கிழமை காலை மியன்மாரில் இருந்து படகு ஒன்று கரையொதுங்கியிருந்தது. இந்தப் படகில் 35 சிறுவர்கள், ஒரு கற்பிணி பெண் உட்பட்ட 102 பேர் இருந்துள்ளனர்.

மியன்மாரில் நடக்கும் உள்நாட்டு யுத்தம் காரணமாக தமது உயிரை காப்பாற்றிக்கொள்ள வேறு எந்த நாட்டிலாவது தஞ்சங் கோருவதற்கு ரோஹிங்கியா மக்கள் படகில் புறப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போதைய காலநிலை காரணமாக காற்று இழுவை அதிகமாக இருந்ததனால் இந்தப் படகு இலங்கை கரையை நோக்கி தள்ளப்பட்டதன் காரணமாகவே முள்ளிவாய்க்காலில் கரையொதுங்கியது.

இந்தப் படகில் இருப்பவர்கள் பத்து நாட்களாக அதற்குள் இருந்ததனால் உணவு எதுவும் இன்றி அவதிப்பட்டுள்ளனர், சிலர் மயக்கமும் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் அவ்விடத்திற்குச் சென்ற முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் படகினுள் இருந்தவர்களுக்கு உணவுகள், குளிர்பானங்கள் ,உலருணவுகளை வழங்கினார்கள், அதில் சிலர் மயக்கநிலையிலும், சுகவீனமுற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இவர்களை முல்லைத்தீவு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், கடற்படையினர், பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு நிலமைகள் தொடர்பில் அறியத்தந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விடயம் கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு கடற்படையினரும் இராணுவத்தினரும் வந்து உலருணவு பொருட்கள், உணவுகள் வழங்கப்பட்ட நிலையிலும் , படகை கரைக்கு கொண்டுவரமுடியாத நிலையிலும், கடற்படையினரின் கப்பலின் உதவியுடன் அந்தப் படகை 102 அகதிகளுடன் திருகோணமலைக்கு கொண்டு செல்லும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டிருந்தனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )