பெற்றோர், ஆசிரியர்களின் உடனடிக் கவனத்திற்கு…!!

பெற்றோர், ஆசிரியர்களின் உடனடிக் கவனத்திற்கு…!!

இருண்டு போகும் இளைய சமுதாயத்தின் நிலை குறித்து ஒரு வைத்தியரின் பதிவு…..

இருள் மயமான எதிர் காலம் நம் கண் முன்னால்…

சுபனி கொழும்பில் ஒரு முன்னணி சர்வதேச பாடசாலையில் எட்டாம் வகுப்பில் உள்ள மாணவி.
“பாடசாலையில் நாங்கள் ஒரு கலை நிகழ்ச்சியை நடத்தினோம், ஒரு சீனியர் அக்கா ப்ரொவ்னி (போதை மாத்திரையின் குழுக் குறியீடு)களை அங்கு விற்பனை செய்தார். என் நண்பர்கள் அதை ட்ரை பன்ன எனக்கு உதவினார்கள். நான் முதன்முதலாக போதை மருந்துகளை உபயோகித்தேன், ஆரம்பத்தில் வெறுப்பாக இருந்தது. எனினும், அதைத் தொடர்ந்து பாவித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நண்பர்கள் நம்பிக்கை ஊட்டினர். உண்மையிலேயே போகப் போக நன்றாக இருந்தது, அதன் பின் ‘ஆப்பிள்’ [ஓபியோட் போதை மாத்திரை (Tramadol Tablet) யின் தெருப் பெயர்] பாவிக்க தொடங்கினேன், அது எங்களது பாடசாலையில் மிகவும் பிரசித்தமானது. நான் அதை நன்றாக உணர்ந்தேன். அது ஒரு சில மணி நேரங்களுக்கு நல்ல மகிழ்ச்சியை தந்தது. ஆனால், அடிக்கடி தேவைப்பட்டது. ஆனால், இறுதியில் விளைவுகள் மோசமாகின. மனச்சோர்வும் கவலையும் மாத்திரமே எஞ்சியிருந்தன. என்னால் படிக்க முடியவில்லை.”

செரீனா…. வயது 16.
“நான் பார்ட்டிகளுக்கு நண்பர்களுடைய வீடுகளுக்குச் செல்வேன், அவர்கள் அனைத்து வகையான சாராயம் உள்ளிட்ட எல்லாவிதமான போதைப் பொருள்களையும் வைத்திருப்பார்கள். அவர்கள் எல்லோரும் அதை பயன்படுத்துவார்கள், அது எனக்கு ஆசையை தூண்டியது. அங்கே ‘மோலி’ (MDMA / எக்ஸ்டஸி எனும் போதைப்பொருளின் சுருக்கப்பெயர்) ஏராளமாக கிடைத்தது . ஆரம்பத்தில் கட்டுப்பாட்டுடன் உபயோகித்தேன், இதில் நான் பிரச்சினை இருப்பதாக உணர்ந்ததில்லை, ஏனெனில் வீட்டில் தந்தை அடிக்கடி புகைப்பிடிப்பதைப் பார்த்திருக்கிறேன். அது கவலையை நீக்கியது, ஆற்றலை அதிகரித்தது. அதை பாவிப்பது ‘ஃபன்’ (fun) னாக இருந்தது. ஆயினும் ​​இரண்டு வருடங்களுக்குள் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் போதைப்பொருட்களைப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. நான் எக்ஸ்டஸி நிறைய பயன்படுத்திய போது பசியே இல்லாமல் போனது, அரிதாகவே சாப்பிட்டேன், உடம்பில் சக்தி இல்லை, உடல் இளைத்தது, கடைசியில் ஐந்து நிமிடத்திற்கும் மேலாக ஒரு புத்தகத்தின் முன் உட்கார முடியவில்லை”.

இலீனா கொழும்பில் ஒரு பிரபலமான பாடசாலையில் கற்கும் ஒரு மேல் தட்டு மாணவி. ஏழாம் வகுப்பிலிருந்து ஏறத்தாழ அவளது வகுப்பு தோழிகள் எல்லோரும் போதைபொருட்களை பாவிப்பதாக சொல்கிறாள். “உண்மையில் பெரும்பாலான தோழிகள் வகுப்பறைகளில் கூட இந்த மாத்திரைகளை பாவித்த நிலையில் தான் இருப்பார்கள். ஆனால் ஆசிரியர்கள் கூட இது பற்றி கவனிக்கவில்லை” என்கிறாள் அவள். (ஏனெனில் இவைகள் நாம் நினைப்பது போல போதை மயக்கத்தை ஏற்படுத்துவது இல்லை).
“இந்தப் போதை மருந்துகளை வாங்குவது கடினம் அல்ல. என் நண்பர்கள் பெரும்பாலும் ரியுஸன் வகுப்பு வகுப்புகளைத் தவிர்க்கிறார்கள், அந்த பணத்தை இவைகளுக்கு பயன்படுத்துகிறார்கள். சிலர் தங்கள் பெற்றோரிடம் வேறு காரணங்களை கூறி பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள். இன்னும் சில தோழிகள் யாருக்கும் தெரியாமல் தங்களது வீட்டு தோட்டத்தில் அல்லது மொட்டை மாடியில் இருந்து தங்களது சொந்த பாவனைக்கான கஞ்சாவை [கன்னாபீஸ்] சாகுபடி செய்து கொள்கின்றனர். பலர் நண்பர்களிடமிருந்து அடிக்கடி தேவையான கஞ்சாவை, டிராமாடோலை இலவசமாக அல்லது கடனுக்கு பெறுகின்றனர், இதற்காக அண்டை வீட்டாரை அல்லது ஒரு ஒரு முச்சக்கரவண்டி ஓட்டுநரைப் பயன்படுத்துகின்றனர். அதே நேரத்தில் எக்ஸ்டாசி, அப்பிள் போன்றவை பார்ட்டிகள் மற்றும் நடனங்கள், கேளிக்கைகளின் போது எளிதாக கிடைக்கின்றன. மருந்துகள் கிடைப்பது எளிது, ஆனால் பணம் எனக்கு கிடைப்பது தான் அவ்வளவு சுலபமல்ல” என்று அவளே ஒப்புக்கொள்கிறாள்.

மேலே உள்ள உண்மைச் சம்பவங்கள், போதைப் பொருட்கள் சட்டவிரோதமாக இருப்பினும் பாடசாலை மாணவர்களுக்கு எவ்வளவு எளிதில் அணுகக்கூடியதாகக் காணப்படுகின்றன, இதன் பாவனை சமூகத்தில் எந்தளவுக்கு ஊடுருவி உள்ளது என்பதற்கான சிறு உதாரணங்கள் மாத்திரமே. ஒரு காலத்தில் ஆண்களிடமும், நகர்ப்புறங்களிலுமே காணப்பட்ட இந்தப் போதைப் பழக்கம் இப்போது பெண் பிள்ளைகளிடமும், கிராமங்களிலும் பரவி வருவது தான் இதன் பயங்கரத்தை விளக்கப் போதுமானது. ஏனெனில் அனைத்து போதை மருந்துகளின் விநியோகத்திற்கான நெட்வொர்க்குகளும் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளன, அரசியல் ஆதரவு தாராளமாக கிடைக்கின்றது. சோர்ஸிங் செய்வதற்கு சமூக ஊடகங்கள் ( Facebook, Whats App,Viber, e business sites) ஒரு பெரிய வழியில் பங்களிக்கிறன. இலங்கையில் நடைபெறுகின்ற பேஸ்புக் மூலம் ஒழுங்கு செய்யப்படும் பார்ட்டிகள், இவைகளுக்கான ஆள் சேர்ப்புக்கும், போதைப்பொருள் பாவனைக்குமான நல்ல களமாக அமைந்து விடுகின்றன. அதே போல போதை பாவிப்பவர்களே தங்கள் சொந்தப் பயன்பாட்டிற்கு நிதி பெறுவதற்கு அதன் வாடிக்கையாளர்களாகவும், விற்பனையாளர்களாகவும் இருக்கின்றனர். போதைப்பொருள் தயாரிப்பு , கடத்தல், பரிமாற்றம், விற்பனை, அதன் துணைச் சேவைகள், நெட்வொர்க்குகள் மிகவும் இரகசியமான பரகசியமானவை (open secret ). அவை மிகவும் சுவாரஸ்யமானவை ஒரு புத்தகம் எழுதுமளவுக்கான ஏராளமான தகவல்களையும் தரவுகளையும் கொண்டவை.

பொதுவாக, ஆப்பிள், மோலி மற்றும் கிரிஸ்டல் மேத், அய்ஸ் ( Apple, Molly, Crystal Meth, Ice) போன்ற போதை மருந்துகள் மாணவர்களால் பயன்படுத்தப்படுகின்றன. இது அவர்களின் பொருளாதார நிலைக்கு ஏற்ப மாறுபடுகிறது. உதாரணமாக, பாவா, மாவா மற்றும் ஹான்ஸ், கஞ்சா (Bawa, Mawa, Cannabis and Hans) போன்ற புகையிலை சார் பொருட்களின் பாவனை குறைந்த வருமானம் கொண்ட குழுக்களில் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து வருகின்றது, அது போல கோகேயின், எக்ஸ்டஸி மற்றும் கிறிஸ்டல் மெத் (cocaine, Ecstasy and Crystal meth) போன்ற விலை உயர்ந்த மருந்துகள் பணக்காரப் பிள்ளைகளால் உபயோகிக்கப்படுகின்றன. ‘ஆப்பிள்’ என அறியப்படும் வலி நிவாரணியான டிராமாடோலின், மற்றும் கேரள கஞ்சா ஆகியவற்றின் பாவனை ஏழை, பணக்கார வேறுபாடு இன்றி மாணவ மாணவிகளிடம் வேகமாக வளர்ந்து வரும் மற்றொரு போதை பொருளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இது நகர்ப்புறம், கிராமம் என வேறுபாடின்றி வியாபித்து வருகின்றது.

புறநிலை அழுத்தம், நண்பர்களின் ஊக்குவிப்பு, சமூக ஊடகங்களின் தாக்கம், மற்றும் தனிப்படும் பயம் (loneliness), குறைந்த சுயமரியாதை (low self esteem) , பிரிந்த குடும்ப கட்டமைப்பு (Broken family) அல்லது செயலிழந்த சமூக அமைப்பு (Dysfunctioning society) என்பன இந்த போதை பயன்பாட்டிற்கு காரணிகளாக இருக்கின்றன.

போதைப்பொருள் பாவனையானது மிக ஆபத்தானது. இது குறித்து ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியர்களும் மூத்தவர்களும் மிகவும் அவதானமாக இருப்பது காலத்தின் கட்டாயத் தேவையாக இருக்கின்றது. போதைப்பொருள் பாவனையை ஆரம்ப நிலைகளில் கட்டுப்படுத்தல் மாத்திரமே மிகச் சிறந்த விளைவுகளை தரவல்லது. போதைப் பொருளை நோக்கிய பாதையை விட்டும் அல்லது அதை நாடுவதை விட்டும் நமது குழந்தைகளை காப்பாற்றுவதும், அந்த கொடிய வலையில் விழாமல் தொடர்ந்து வைத்திருப்பதும் நமது ஒவ்வொருவரினதும் கடமையாக இருக்கின்றது. போதை பொருளுக்கு அடிமையாகி விட்டால் அதன் பின் அதிலிருந்து மீட்டு எடுப்பது என்பது சிரமமான காரியமாகவே காணப்படுகிறது. ஆகவே வருமுன் காப்பதே நம் முன்னால் உள்ள மிகச் சிறந்த கடமையாக இருக்கிறது.

Dr PM. Arshath Ahamed MBBS, MD PEAD
குழந்தை நல மருத்துவ நிபுணர்,
ஆதார வைத்தியசாலை,
சம்மாந்துறை.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )