விமர்சனத்தால் வீழ்வாயா? பெண்ணே……..!!

விமர்சனத்தால் வீழ்வாயா? பெண்ணே……..!!

(சு.ஜனா)

இந்தக் கவிதை
இந்த சமுதாயத்தைத் தட்டியெழுப்புமா?
இந்தக் கவிதை – பல
இதயங்களைத் திறக்குமா?
இந்தக் கவிதை
இனிவரும் காலங்களை
இனிதாக்குமா?
இத்தனை பல கேள்விகளுடன்…..
இந்தக் கவிதை இறங்கி
முன்னோக்கி வருகிறது…!!

ஆண்… பெண்… என்கின்ற
அநியாயப் பாகுபாடு
அடிமைத்தனம்…. சிறுமைத்தனம்…..
அடியோடு ஒழியுமா..?
அழு……!!
பரவாயில்லை..!! – ஆனால்
அதிலே கரையாதே.
அழும் கண்ணீரைத் தண்ணீரால்
கரைத்துவிடு…..
எழு….!! எழு……!! – ஏனென்றால்
அடுத்த சந்ததி மாந்தர்க்கும்
நீதானே வழிகாட்டி..!!

உனக்கு மேல் வீசப்படும்
தடைக் கற்களால்
காயப்பட்டு…. உன்னை நீயே
கட்டிவைக்கப் போகிறாயா? – இல்லை
காற்றாய்… இந்தக் காலத்துடன் கலந்து
வீசப் போகிறாயா….??

ஒரு பெண் தனித்து நின்றால்
ஓரங்கட்டும் மனிதர்களால்
ஒடுங்கிப் போவாயா? – இல்லை
ஓங்கித் தளைப்பாயா??
குற்றம்…. குற்றம்….
குறை சொல்லும் கூட்டம்
அறைவிடும் பல சட்டம் – இதில்
அகப்பட்டு…. உனக்கு நீயே
வரையப் போகிறாயா
வட்டம்…..??

கொடுமை என்னவென்றால்…
பெண்ணைப் பெண்ணே நசுக்கும்
வஞ்சம்தான்…..
பொறாமைத் தீயில் வேகிவிடாதே….
சாட்டுக்குச் சகோதரத்துவம்
பேசும் வாய்கள்…
சந்தர்ப்பம் பார்த்திருந்து
உன்னை வீழ்த்த நினைக்கும்….
சாயாதே….. பெண்ணே…..!! ஓயாதே….!!

முகமூடி மனிதர்களின்
முகத்திரை விலகுமா? – அவர்களின்
அகக்கண்கள் திறக்குமா?
சகமனுஷியாய் மாந்தரையும் மதிக்குமா? – இல்லை
மட்டமாய் நினைக்குமா?
இந்த நிலை
இனிவரும் பெண்ணினத்தையும்
தொடருமா…..??

பாரதி சொன்னான் வேதம்!!
வீழ்வேனென்று நினைத்தாயோ? – நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ…??
வீரத்துடன்… காரத்துடன்…
உரத்துச் சொல்..!!
உலகுக்கே எதிரொலிக்க உரத்துச் சொல்…!!
உனக்கு உரிமையிருக்கு..!
உனக்குள் உண்மையிருக்கு..!
உன் ஒவ்வொரு அணுவிலும்
சக்தியிருக்கு….. புத்தியிருக்கு….
வெளிப்படு எழுச்சியுடன்!!
பெண்ணே…..!! பெண்ணே…..!!
நீ நினைத்தால்
மாறும் இச் சமுதாயம்
கண் முன்னே……!!

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )