
மக்கள் புரட்சி வெடிக்கும் நிலை; இரத்தக் களரி ஏற்பட இடமளிக்க வேண்டாம்; ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும்
மக்கள் புரட்சி வெடிக்கும் நிலைக்கு கொண்டு சென்று நாட்டில் இரத்தக் களரி ஏற்படுவதற்கு இடமளிக்காது, நெருக்கடி நிலைமைகளுக்கு காரணமான ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று முன்னாள் அமைச்சரான 43 ஆவது படையின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை ராஜபக்ஷக்கள் ஆட்சிக் கதிரைகளில் இருக்கும் வரையிலும் மற்றும் நிர்வாக விடயங்களில் தலையிடும் வரையிலும் தேசிய ரீதியிலோ சர்வதேச மட்டத்திலோ இலங்கை மீது எவருக்கும் நம்பிக்கை ஏற்படப் போவதில்லை என்றும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதன்போது சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் எரிபொருள் நெருக்கடி நிலைமையை தீவிரமடைந்துள்ள அதேவேளை பொருட்களின் விலைகளும் பாரியளவில் உயர்வடைந்துள்ளன. சில பொருட்களின் விலைகள் 500 முதல் 1000 வீதங்களாலும் உயர்வடைந்துள்ளன. இங்குள்ள நெருக்கடி தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
நாட்டில் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளன. ஏற்படக் கூடிய நெருக்கடிகள் ஜனாதிபதிக்கு தெரியாதா? நாட்டை முடக்குவது இதற்கு தீர்வாகாது. தற்போது எரிபொருள் நெருக்கடியால் மக்கள் வீதிக்கு வரும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மக்களை வீடுகளில் இருக்கச் செய்து பொலிஸாரை கொண்டு மக்கள் போராட்டங்களை தடுக்க முடியும் என்று நினைக்கக் கூடாது.
இதற்கு காரணமான ஜனாதிபதி பதவி விலகிச் செல்ல வேண்டும். அதேபோன்று ராஜபக்ஷக்கள் ஆட்சி ஆசனங்களில் இருக்கையிலும், அவர்களின் அடிவருடிகள் தீர்மானங்களை எடுக்கும் வரையிலும் தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் இலங்கை மீது நம்பிக்கை ஏற்படப் போவதில்லை.
இதனால் ஜனாதிபதி உள்ளிட்ட ராஜபக்ஷக்கள் முழுமையாக பதவிகளில் இருந்து விலக வேண்டும். எரிபொருள் விடயத்தில் ராஜபக்ஷக்கள் தலையிடுவதில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுகின்றோம்.
இதேவேளை பிரதமர் தொடர்பில் நம்பிக்கையொன்று ஏற்பட்டிருந்த போதும், அதுவும் இல்லாது போயுள்ளது. அவர் செய்துள்ள ஒரே வேலையாக சிக்கியிருந்த ராஜபக்ஷக்களை பதுங்குக் குழிகளில் இருந்து வெளியே எடுப்பதற்கு உதவுவதையே செய்கின்றார். இந்நிலையில் அவர் மீதான நம்பிக்கை மக்களிடையே இல்லாமல் போயுள்ளது. இதனால் ராஜபக்ஷக்களை பாதுகாப்பதை கைவிட்டு வெளியில் வந்து மக்களுடன் இணைந்து எதிர்கால பாதைக்காக முறையான வேலைத்திட்டத்திட்டங்களுக்கு பங்களியுங்கள். இல்லையென்றால் மக்களின் கோபம், வைராக்கிய தீயில் நீங்கள் எரிந்து சாம்பலாகலாம் என்பதனை புரிந்துகொள்ளுங்கள்.
ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை மேலும் தீவிரமடைகின்றது. இவ்வாறாக மக்கள் புரட்சி வெடிக்கும் நிலைக்கு கொண்டு சென்று நாட்டை இரத்தக் களரி நிலைக்கு கொண்டு செல்வதற்கு இடமளிக்காது ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும். அவ்வாறு பதவி விலகிய பின்னர் 24 மணித்தியாலத்திற்குள் பாராளுமன்றத்தை கூட்டி இரகசிய வாக்கெடுப்பை நடத்தி ஜனாதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும். அதன்பின்னர் தேர்தலுக்கான தினத்தை தீர்மானிக்க வேண்டும்.
மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தும் வகையில் ஆட்சியாளர்கள் செயற்படுவார்களாக இருந்தால் அது ஆபத்தான நிலைமைக்கே கொண்டு செல்லும் என்பதனை புரிந்துகொள்ள வேண்டும்.