
ரணிலுக்காக மாத்தறையில் ஜூன் 16 இல் பெரும் பேரணி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் வெற்றிக் கூட்டணியில் பொதுஜன பெரமுன மற்றும் ராஜபக்சக்கள் இணைவதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்ட நிலையில், ரணில் விக்ரமசிங்கவின் பிரசாரப் பணிகளுக்காக ஜூன் மாதம் 16 ஆம் திகதி பேரணியொன்றை நடத்துவதற்கு மூன்று கட்சிகள் தீவிரம் காட்டி வருவதாகவும், நான்காவது அணி ஒன்றும் இணைந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நான்காவது தரப்பு நிமல் லான்சா தலைமையிலான குழுவாகும். புதிய கூட்டணி என்ற பெயரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்காக பொதுக்கூட்டத்தை தனித்து நடத்துவதற்கு அக்குழு தீர்மானித்துள்ளது.
ஜூன் 16 ஆம் திகதி மாத்தறையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கு போட்டியாக ஜூன் 8 ஆம் திகதி அம்பலாந்தோட்டை இந்த பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தென்மாகாண ஆளுநர் லக்ஸ்மன் யாப்பா, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டு பிரச்சார நிறுவனம் ஆகியோரின் ஏற்பாட்டில் மாத்தறையில் நடைபெறவுள்ள பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு போட்டியாகவே லான்சா அணியும் பொதுக்கூட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
ராஜபக்ச குடும்பத்துடனும் பொதுஜன பெரமுன கட்சியுடனும் முரண்பட்டுள்ள நிமல் லான்சா அணியினர் ரணில் விக்ரமசிங்கவுக்காக தனித்தனியாக பிரச்சாரம் செய்யத் தயாராகி வருவதையே இதன் மூலம் தெளிவுபடுத்துகிறது.
ஆனால், புதிய கூட்டணியை கட்டியெழுப்புவதில், அனைத்து வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஒன்று சேரும் திறன் உச்சத்தில் உள்ளது என்பதும் உறுதியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வெற்றி பெறச் செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் வழிநடத்தல் குழுவில் பசில் ராஜபக்ச பங்குபற்றியதன் காரணமாக நிமல் லான்சா மற்றும் அனுர பிரியதர்சன யாப்பா தலைமையிலான புதிய கூட்டணிக் குழு இதில் பங்கேற்கவில்லை.
ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட முடியாத காரணத்தினால் வெளியேறியதாக நிமல் லான்சா மற்றும் அனுர பிரியதர்சன யாப்பா குழு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், அவர்கள் இல்லாமலேயே, பசிலின் பங்கேற்புடன் இந்த சந்திப்பு இடம்பெற்றதுடன், ஜனாதிபதிக்கான பிரசாரத்தை ரணில் விக்ரமசிங்க செய்கின்றார் என்றால், பசில் ராஜபக்ச இருக்க வேண்டும் என வஜிர அபேவர்தன குறிப்பிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

