
ஜனாதிபதியின் செயற்பாடுகளைக் கண்டித்து இலட்சக்கணக்கான அரச ஊழியர்கள் வீதியில் இறங்குவர்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகளை கண்டித்து இலட்சக்கணக்கான அரச ஊழியர்கள் வீதியில் இறங்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தலை இலக்காகக் கொண்டு தனக்கு ஏதாவது வாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியுமா என்பதனனை எதிர்பார்தே ஜனாதிபதி எதனையும் செய்கின்றார். அந்த வகையில் உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்களை இரத்துச் செய்வது தொடர்பில் அமைச்சரவையில் ஆராயப்பட்டுள்ளது. இதுவொரு அரசியல் சந்தர்ப்பவாதமே. இதன்மூலம் பழைய மொட்டுக் கட்சியின் தலைவர்களை பிரஜைகள் குழு தலைவர்களாக நியமிக்கவே முயற்சிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அந்தக் குழுவில் நியமிக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள காரணத்திற்காகவே வேட்பு மனுக்களை இரத்துச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் விக்கிரமசிங்கவுக்கு தேவையானவாறும், அவரின் அரசியல் நோக்கங்களுக்காகவும் நாட்டின் சட்டங்களை மாற்றவும் முடியாது.
இதேவேளை கிழக்கு முஸ்லிம் மக்களை ஏமாற்ற அஷ்ரப் நினைவு மண்டபத்தை அமைக்க 25 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஏன் தேர்தல் நெருங்கும் போது இதனை செய்ய வேண்டும் என கேட்கின்றேன்.
எவ்வாறாயினும் ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகளுக்கு எதிராக மூன்று இலட்சம் வரையிலான அரச சேவையாளர்கள் வீதிக்கு இறங்க தயாராகியுள்ளனர். தாதிமார், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் இவ்வாறு வீதிக்கு இறங்கவுள்ளனர். அரச நிறுவனங்கள் பல அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாலேயே இவ்வாறு போராட்டம் நடக்கவுள்ளது.
மக்கள் ஆணையில்லாத இந்த அரசாங்கமும், ஜனாதிபதியும் எப்படி முயற்சிகளை முன்னெடுத்தாலும் இறுதியில் ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றே தெரிகின்றது. மொட்டுக் கட்சியின் தலைவர்கள் ரணிலுக்கு இடம்கொடுத்தாலும் கட்சி உறுப்பினர்கள் விட மாட்டார்கள். அத்துடன் மொட்டுடன் சேர்ந்தால் சிறுபான்மை வாக்குகள் அவருக்கு கிடைக்காது. அதேபோன்று சிறுபான்மை மக்களுடன் இருந்தால் பெரும்பான்மை மக்களின் வாக்குகள் கிடைக்காது இதனால் அவர் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றார்.

