
பாராளுமன்றம் ஜூனில் கலையும்?
பொருளாதார விடயங்கள் தொடர்பான முக்கிய சட்டமூலங்கள் சிலவற்றை நிறைவேற்றிய பின்னர் பாராளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்றத்தை கலைக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு ஜனாதிபதியை இணங்க செய்யும் திட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி கண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின்றன.
இதன்படி ஜூன் நடுப்பகுதியில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஆகஸ்டில் தேர்தல் நடத்தப்படலாம் என்று அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்பட முன்னர்
பொருளாதார நிலைமாற்றம் மற்றும் பகிரங்க நிதிசார் முகாமைத்துவம் ஆகிய சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது நிறைவேற்றப்படவுள்ளன.
எதிர்வரும் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் குறித்த சட்டமூலங்கள் முன்வைக்கப்படவுள்ளதுடன், அடுத்த மாதம் 2ஆம் வாரத்தில் அவை நிறைவேற்றப்படவுள்ளன.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்ற தேர்தலை நடத்த இணங்கினால் அந்த சட்டமூலங்களை நிறைவேற்ற உதவுவோம் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதிக்கு கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி ஜூனில் பாராளுமன்றம் கலைக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பாராளுமன்றம் ஜூன் 14ஆம் திகதி கலைக்கப்படும் என்றும், ஜனாதிபதி இதற்கு இணங்கியுள்ளார் என்றும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

