
ரணில் நவீன பயங்கரவாதி
நமது சமூகத்தின் கூட்டு அடையாளத்தை அழிக்க தேவையான சட்டங்களை கொண்டு வருதல் மற்றும் இலங்கையை இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக மாற்றுதல் போன்ற இரண்டு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் நவீன பயங்கரவாதியான ரணில் விக்ரமசிங்க செயற்பட்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ராம ராவணன் மற்றும் விபீஷண நவீன கதையை பிரபல்யப்படுத்தும் நிகழ்வில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர், சீனாவின் ஆய்வுக் கப்பலுக்கு இலங்கை வருவதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி அமெரிக்காவின் செல்வாக்கு காரணமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நவீன பயங்கரவாதியான ரணில் விக்ரமசிங்க, நவதாராளவாத மூலோபாயத் தேவையை நிறைவேற்றும் நிகழ்ச்சி நிரலை ஒரு கையில் வைத்துக் கொண்டிருக்கிறார். அதன்படி, நமது சமூகத்தின் கூட்டு அடையாளத்தை அழிக்கத் தேவையான கட்டளைகளை கொண்டு வருவதற்கான நிகழ்ச்சி நிரல் என்பது தெளிவாகின்றது.
நான் சுமார் 24 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறேன். ஆனால், இவ்வளவு வேகமாக அவசரச் சட்டங்களை ஏற்றுக் கொண்டதை நாம் இதற்கு முன் பார்த்ததில்லை. ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதிலிருந்து 75 சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் மேலும் 67 சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார்.
நிறைவேற்றப்படும் மசோதாக்களில் எல்.ஜி.பி.டி. மசோதாக்கள், விவாகரத்துக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் மசோதாக்கள் போன்றவை அடங்கும். இச்சட்டத்தின்படி, குடும்ப தகராறு குறித்து வெளிநபர்கள் புகார் அளித்தால், பொலிஸார் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், அதுவும் விவாகரத்துக்கு காரணமாக இருக்கலாம்.
இலங்கையின் அனுமதியுடன் சீன ஆய்வுக் கப்பல் ஒன்று வந்து கொண்டிருந்ததை நாம் அறிவோம்; பின்னர், வழியில் அனுமதிக்க முடியாது என்று கூறப்பட்டதால், சர்வதேச கடற்பரப்பில் நிறுத்தப்பட்டு, மாலைதீவு கடற்பரப்பில் சில நடவடிக்கைகளில் ஈடுபட்டு விட்டு திரும்பியது. இதன்படி, சீனாவின் ஆய்வுக் கப்பலுக்கு இலங்கை வருவதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி அமெரிக்காவின் செல்வாக்கு காரணமாக மாற்றப்பட்டுள்ளது என்பது தற்போது எமக்குத் தெளிவாகத் தெரிகிறது.
ரணில் விக்ரமசிங்கவின் கைகளில் உள்ள மற்றைய நிகழ்ச்சி நிரல் இலங்கையை இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் உருவாக்கும் நிகழ்ச்சி நிரலாகும். இப்போது இலங்கைக்கு ஆறு வழி இணைப்பை உருவாக்க இந்தியா தயாராகி வருகிறது. 2023 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஒரு கூட்டு அறிக்கையில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஆறு திட்ட ஒருங்கிணைப்பு பணியை நாம் நன்கு அங்கீகரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
2500 வருடங்களாக எவ்வளவோ இடர்பாடுகளுக்கு மத்தியிலும் பாதுகாக்கப்பட்டு வந்த நமது நாகரீக பாரம்பரியத்தையும் அடையாளத்தையும் இறையாண்மையையும் இழந்து இந்த நாட்டை இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக மாற்றப் போகிறது. அதற்கு, ஆறு திட்ட இணைப்பு நடவடிக்கைக்கு மேலதிகமாக எட்கா ஒப்பந்தமும் வருகிறது.
இன்று இறையாண்மையை பலிகொடுத்து இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லும் அரசை மீட்டு மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு உள்ளது. அந்தப் பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்ற வேண்டும் எனவும் போராட்டம் என்றழைக்கப்படும் பயங்கரவாதத்தின் நவீன யுகத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

