
சஜித்துக்கு சவால் விடும் டயானா கமகேயின் கணவர்
“எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது தொலைப்பேசி சின்னத்தில் களமிறங்க அனுமதிக்கப்போவதில்லை” என்று எமது மக்கள் முன்னணி கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சரான டயானா கமகேயின் கணவருமான சேனக டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை(10) நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
”ஐக்கிய மக்கள் சக்தியை நான் தான் ஸ்தாபித்தேன். 2010 ஆம் ஆண்டு ஸ்ரீபதி சூரியாராச்சியும் மங்கள சமரவீரவும் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார்கள்.
அப்போது, நான் எமது ஐக்கிய மக்கள் முன்னணி கட்சியின் ஸ்தாபகராக இருந்தேன். நான் அந்தப் பொறுப்பிலிருந்து விலகிய பின்னர், கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமித்தேன். அப்போது கட்சியின் செயலாளராக டயானா கமகே இருந்தார்.
பின்னர் டயானா கமகே அந்தப் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, ரஞ்சித் மத்தும பண்டார அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
கட்சியை முன்னோக்கி கொண்டுசெல்லவே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இவை அனைத்துக்குமான எழுத்து பூர்வமான சான்றுகள் உள்ளன.
இந்த நிலையில், தேவையேற்பட்டால் சஜித் பிரேமதாஸவின் கட்சியின் தலைமை பதவியை நாம் கேள்விக்கு உட்படுத்த முடியும்.
இது தொடர்பாக நாம் வழக்கும் தாக்கல் செய்யவுள்ளோம். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ உள்ளிட்டவர்களுக்கு பாரிய பிரச்சினைகள் ஏற்படும். அந்த வகையில், ஒருபோதும் தொலைப்பேசிச் சின்னத்தில் அவரை களமிறக்க இடமளிக்க மாட்டோம்”என்றும் சேனக டி சில்வா தெரிவித்துள்ளார்.

