கிழக்கிற்குள் இந்தியா நுழைவதை ஏற்க முடியாது

கிழக்கிற்குள் இந்தியா நுழைவதை ஏற்க முடியாது

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள் போன்ற பாதுகாப்பு மற்றும் பொருளாதார மையங்களை இலங்கைக்கு அண்மித்த நாடுகளுக்கு வழங்குவது நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்தாகும் என கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ.கலீலுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒலுவில் துறைமுகத்தினால் அண்மைய பிரதேசங்கள் கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்டு துறைமுகமும் ஒழுங்காக இயங்க முடியாமல் உள்ள சூழ்நிலையை சீரமைக்க இலங்கை அரசாங்கமும், கிழக்கு மாகாண ஆளுநரும் அலட்சியப்போக்கில் உள்ளதை காரணமாக வைத்து அந்த துறைமுகத்தை சீரமைக்கும் நோக்கில் இந்திய உயர்ஸ்தானிகர் கிழக்குக்கு விஜயம் செய்து குறித்த துறைமுகம் தொடர்பில் ஆய்வு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஊடக செய்திகளினூடாக அறிந்துகொள்ள முடிந்தது.

எதிர்காலத்தில் இந்தத் துறைமுகத்தை அண்டை நாடான இந்தியாவுக்குக் கொடுப்பதற்காக ஒலுவில் கடலை அழிக்க பொறுப்பான அதிகாரிகள் குழு எவரேனும் சதி செய்கிறார்களா? என்பதை அரசாங்கம் பரிசீலித்து பார்க்க வேண்டும்., வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள் போன்ற பாதுகாப்பு மற்றும் பொருளாதார மையங்களை இலங்கைக்கு அண்மித்த நாடுகளுக்கு வழங்குவது நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்தாகும்.

இலங்கை மண்ணுக்குள் இந்திய அமைதிப் படை நுழைந்து செய்த அநியாயங்கள், இலங்கை உள்நாட்டு போரின் போது இந்தியா கடைபிடித்த ராஜதந்திர விடயங்கள், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதியின் அறிக்கையின் அடிப்படையில் பயன்படுத்தப்பட்ட கருத்துக்கள் இந்தியா தொடர்பில் எங்களுக்கு மேலும் அச்சத்தை கொடுத்துள்ளது. அதனாலே தான் இந்த நிலைப்பாட்டுக்கு நாங்கள் வரவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது குழுவினர் நாட்டின் சிறுபான்மை சமூகத்தின் மீது காட்டும் அக்கறையாலும், தற்போதைய தேர்தல் காலத்தில் முஸ்லிம் சமூகத்தை அவமானப்படுத்தும் வகையில் பேசியதாலும், முஸ்லிம் சமூகம் வாழும் கிழக்கு மாகாணத்தில் இந்திய பிரவேசத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. கிழக்கின் உரிமைகள், சொத்துக்கள், இருப்புக்கள், பாதுகாப்பு தொடர்பில் கிழக்கு மாகாணத்தின் மத, அரசியல் மற்றும் சிவில் அமைப்புக்களின் தலைவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )