
பொதுஜன பெரமுன- சுதந்திரக் கட்சியில் பிளவுகள்; பல அரசியல்வாதிகளின் எதிர்காலம் கேள்விக் குறி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றில் காணப்படும் பிளவுகள் பல அரசியல்வாதிகளின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கியுள்ளதாகவும் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தவிர ஏனைய அனைத்து அரசியல் குழுக்களும் பாரிய நெருக்கடியை எதிர் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றுள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாரிய பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளது. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிரிவுகளாகப் பிளவுபட்டுள்ள இலங்கை தேசியவாதக் கட்சியின் கடந்த கால நெருக்கடிகளை விட இந்த மோதல் மிகவும் தீர்க்கமானதாகத் தோன்றுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதே நிலையே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலும் உருவாகியுள்ளதாகவும் ஜனாதிபதியை ஆதரித்தாலும் அல்லது சுயாதீனமாக இயங்கினாலும் அங்கு இரு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இதில் எந்த குழுவுடன் இணைவது என பல அரசியல்வாதிகள் குழம்பியுள்ளதாகவும் இந்த நிலை பல அரசியல்வாதிகளின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரவும் வழிவகுக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்கூட்டியே பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படாவிட்டால் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் பொதுத் தேர்தலில், வெற்றிபெறும் வேட்பாளரை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவுக்கு நிச்சயமாக முடிவு மிகவும் சாதகமாக அமையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவாக மாறினால், அந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு, 1982 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன செய்தது போல், தேர்தல் வரைபடத்தைச் சுருக்கி, பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, பல உறுப்பினர்களின் எதிர்கால அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமெனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.