
சூத்திரதாரிகளை தப்ப விடமாட்டோம்; எமது ஆட்சியில் நீதி கிடைக்கும்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக தமது அரசாங்கத்தில் கடும் நடவடிக்கை எடுப்பதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உறுதிமொழியை வழங்கியுள்ளது.
தமது உறுதி மொழி அடங்கிய அறிக்கையை கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் அந்தக் கட்சி கையளித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி பிரதிநிதிகள் நேற்று வியாழக்கிழமை பொரளையிலுள்ள பேராயர் இல்லத்திற்கு சென்று அதனை கையளித்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் 7 விடயங்களை உள்ளடக்கியதாக குறித்த உறுதிமொழி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலானது இனங்களுக்கிடையே முரண்பாடுகளை தோற்றுவிக்கும் நோக்கத்தில் ஏதோவொரு குழுவினர் முன்னெடுக்கப்பட்ட சூழ்ச்சியாகும் என்றும், அந்த குற்றச்செயலின் பிரதான சூத்திரதாரி மற்றும் திட்டமிட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள அடிப்படை உரிமை வழக்குகளில் குற்றவாளிகளாக்கப்பட்ட மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக தராதரம் பாராது குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்படும் என்றும் அந்த உறுதிமொழி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக இதுவரையில் விசாரணை முன்னெடுக்கப்படாதிருக்கும் விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்த விசேட ஆணைணக்குழுவொன்றை அமைக்கவும், அதன்படி பொறுப்புக் கூற வேண்டியவர்களாக அறிவிக்கப்படுபவர்களுக்கு எதிராக குற்றப் பத்திரங்கள் முன்வைக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

