கச்சதீவு விவகாரம் வலுப்பெற்று வருவதால் இலங்கை,இந்திய அரசுகள் பேச வேண்டும் தேர்தலின் பின் நிலைமை மாறலாம் என்கிறார் சித்தார்த்தன்

கச்சதீவு விவகாரம் வலுப்பெற்று வருவதால் இலங்கை,இந்திய அரசுகள் பேச வேண்டும் தேர்தலின் பின் நிலைமை மாறலாம் என்கிறார் சித்தார்த்தன்

கச்சதீவை மீட்கப் போகிறோம் என இந்தியாவில் தேர்தல் காலப் பிரசாரங்கள் வலுப்பெற்று வரும் நிலையில் கச்ச தீவு தொடர்பில் இரு நாட்டு மத்திய அரசாங்கங்கள் பேசி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை சுன்னாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

1976 ஆம் ஆண்டு இருநாட்டு அரசுகளும் இணைந்து செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை மூலம் இலங்கைக்கு கச்சதீவு உரித்தான நிலையில் ஏன் இப்போது அதனை மீட்க வேண்டும் என இந்தியா கேட்கிறது எனத் தெரியவில்லை.

இந்நிலையில் தற்போது இந்தியாவில் பொதுத் தேர்தல் இடம் பெற உள்ள நிலையில் குறிப்பாக தமிழ்நாட்டில் கச்ச தீவை மீட்டாக வேண்டும் என்ற கோசங்கள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

கச்சதீவு விவகாரம் ஏன் இப்போது இந்தியாவில் சூடு பிடித்துள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாக உள்ள நிலையில் கச்சதீவு தொடர்பில் நாம் பேசாமல் இருப்பதே சரி என எனக்குத் தோன்றுகிறது.

கச்சதீவு விவகாரம் தொடர்பில் இந்தியாவுடன் மீண்டும் பேச வேண்டுமானால் மத்திய அரசுடன் தான் பேச வேண்டும் ஏனெனில் மாநிலத்தின் அனேகமான அதிகாரங்கள் மத்திய அரசிடம் காணப்படுகிறது.

ஆகவே இந்தியாவில் இம்மாதம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலின் பின்னர் கச்சதீவு தொடர்பான கோசங்கள் குறைந்து விடும் என நினைக்கிறேன் அவ்வாறு கோசங்கள் முன்வைக்கப்பட்டால் இரண்டு மத்திய அரசுகளும் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )