
கல்முனை வடக்கில் கறுப்புப் புத்தாண்டு; இளைஞர்கள் பெரும் பேரணி
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிருவாக நடைமுறைகளுக்கு இடையீடு செய்ய வேண்டாம் எனவும் தங்களுக்கான அதிகாரங்களை சுயாதீனப்படுத்தக் கோரியும் தொடங்கப்பட்ட போராட்டத்தின் 21 வது நாளான நேற்று,கறுப்பு சித்திரை புத்தாண்டு தினமாக மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடாத்தப்பட்டது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இதுவரை எந்தவித தீர்வும் கிடைக்காத நிலையில் தொடர்கிறது
இந்த நிலையில் நேற்று புத்தாண்டை முன்னிட்டு கறுப்பு புது வருடமாக, மேற்படி பிரதேச செயலகத்திற்குள் இருக்கும் ஸ்ரீ வர சித்தி விநாயகர் ஆலயத்தின் முன்பாக பொங்கல் பொங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது மருத்து நீர் தேய்த்து அந்த இடத்திலே ஒருவர் நீராடியதோடு இது எங்களுடைய மதக் கடமை அதனால் அதை நிறைவேற்றி இருக்கிறோம். இருந்தாலும் இது எங்களுக்கு கறுப்பு சித்திரை அதனால் நாங்கள் அதை கொண்டாடப் போவதில்லை என்று கூறினர்.
மேலும் அந்த இடத்திற்கு வந்திருந்த கல்முனை பொலிஸார், இந்த நிகழ்வுகளிலே கலந்து கொள்ள வருகை தந்திருந்த இளைஞர்களில் தாமோதரம் பிரதீபன், புஷ்பராஜ் துஷாநந்தன், அருள்ஞானமூர்த்தி டிலான்சன் ஆகிய மூவருக்கும் நீதிமன்ற தடை உத்தரவினை கொண்டு வந்து வழங்கியதோடு அவர்கள் போராட்ட களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு இருந்தார்கள்.
அதனைத் தொடர்ந்து அந்த இடத்திலே கூடிய இளைஞர்கள் போக்குவரத்துக்கு எந்தவித இடையூறுகளும் இன்றி யாருக்கும் எந்த தொந்தரவுகளோ தொல்லைகளோ இன்றி மோட்டார் சைக்கிள்களில் கறுப்பு ஆடைகள், கறுப்பு கொடிகளுடன் பேரணியாகப் புறப்பட்டனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முன்பாக ஆரம்பமாகிய இந்தப் பேரணி நற்பிட்டிமுனை , சேனைக்குடியிருப்பு, துரைவந்தியமேடு ,பெரியநீலாவணை ,மருதமுனை, பாண்டிருப்பு ஊடாக கல்முனை ஸ்ரீ தரவைச் சித்தி விநாயகர் ஆலயத்திற்கு சென்று அங்கிருந்து மீண்டும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை வந்தடைந்தது.
இதன்போது ஊர்வலக்காரர்கள், தமிழர் கலாசார முறைப்படியாக பறை இசை ஒலிக்கப்பட்டு பறை வாத்தியங்களோடு அனைவரும் வரவேற்கப்பட்டு பிரதேச செயலகத்தின் முன்பாக அழைத்துவரப்பட்டு ஆலயத்திலே பூஜை வழிபாடுகளில் அனைவரும் ஈடுபட்டு அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.