
அரசியலில் இருந்து விலகி விடுங்கள்; 4 முன்னாள் ஜனாதிபதிகளிடம் டலஸ் கோரிக்கை
செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டுள்ள நான்கு முன்னாள் ஜனாதிபதிகளும் தமது சொந்த நலனுக்காகவும் மக்களுக்காகவும் தலைவணங்கி அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டுமென சுதந்திர மக்கள் சபை பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் செயற்பாட்டு அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
சுதந்திர மக்கள் சபை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது,
1982இல் நடந்த தேர்தலின் நிழல்கள் இப்போது தெரிகின்றது. இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும்.
தேர்தல்கள் தொடர்பில் யாரும் குழப்பிக்கொள்ளத் தேவையில்லை. திட்டமிட்டப்படி ஜனாதிபதித் தேர்தல் அரசியலமைப்புக்கமைய நடத்தப்பட வேண்டும். தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் 93 நாட்களில் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு விடுக்க வேண்டும். புத்தாண்டு பிறந்து 176 நாட்களில் புதிய ஜனாதிபதி நியமிக்கப்படுவதையும் தவிர்க்க முடியாது. அதன்மூலம் புதிய அமைச்சரவையும் அமைக்கப்பட வேண்டும். இந்நிலையில் நாட்டை விற்கும் நிகழ்ச்சி நிரல்களுக்கமைய முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் நாட்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
1982 முதலாவது நிறைவேற்று ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மீள பார்க்க வேண்டும் என்று கோருகின்றேன். அந்த முதலாவது ஜனாதிபதித் தேர்தலின் நிழல்கள் சில தற்போது தேர்தல் நெருங்கும் போது தெரிகின்றது இதனால் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்றார்.