
ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை ஜே.வி.பி புரிய மறுக்கின்றது: தமிழரசுக் கட்சி குற்றச்சாட்டு
இலங்கைத் தீவின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்யும் தீர்மானத்தை எடுக்கும் சக்தியாக தமிழ் மக்கள் இருக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்
அரசியல் தீர்வு கிடைக்கும் வரை தமிழரசுக் கட்சி போராடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை , ‘‘தமிழ் மக்களின் நம்பிக்கையை வெல்லும் வகையிலான எந்தவொரு முன்மொழிவும் ஜே.வி.பியின் அரசியல் கூட்டணி எனக் கூறப்படும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரையில் உள்ளடங்கவில்லை.
இவ்வாறான பின்புலத்தில் ஈழத்தமிழர்கள் எவ்வாறு அவருக்கு வாக்குகளை வழங்குவார்கள்‘‘ என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், அனுரகுமார திஸாநாயக்க தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல தெற்கின் சிங்கள மக்களிடையேயும் இன்னும் தான் திறமையான தலைவர் என்பதை நிரூபிக்க தவறியுள்ளதாகவும் சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தங்களுக்கான வாக்குகளை சேகரிக்கும் வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்திலேயே சிறிதரன் இவ்வாறான கருத்தை முன்வைத்துள்ளார்.
எவ்வாறாயினும், இவ்வாறு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஜே.வி.பி தரப்பிலிருந்து எந்தவொரு பொறுப்பான பதிலும் இது வரை வெளிவரவில்லை.
சிறிதரனின் இந்தக் கருத்து தொடர்பில் ‘ஒருவன்‘ செய்தித்தளம் வினவிய போது, எதுவிதமான கலந்துரையாடல்களும் இன்னும் இடம்பெறவில்லை எனவும் உத்தியோகபூர்வ அறிக்கைகள் எதுவும் வெளியிடப்படவில்லை எனவும் ஜே.வி.பியின் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, காணி உரிமை மற்றும் மொழிப்பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களில் ஜே.வி.பி. அதன் தெளிவான நிலைப்பாட்டை கடந்தகாலத்தில் வெளிப்படுத்தியுள்ளதாகவும் ஜே.வி.பியின் தரப்பில் மேலும் வலியுறுத்தப்பட்டது.
இலங்கையின் மூன்றாவது தேசியக் கட்சியாக மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி விளங்குகிறது. இவர்களின் கொள்கைகளும், செயற்பாடுகளும் இனவாத அரசியலுக்கு அடித்தளமிட்டது என்பது பகிரங்கம்.
இலங்கைத் தீவானது பல்லின கலாசார பாரம்பரியத்தை கொண்ட நாடாக விளங்குகின்றது.
ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பிலான எந்தவொரு கருத்துக்களையும், கொள்கைகளையும் ஜே.வி.பி கொண்டிருக்கவில்லை என்பது ஈழத் தமிழர்கள் மத்தியில் கேள்வியை உருவாக்கியள்ளது.
இது தொடா்பாக தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.