
எந்த விவாதத்திற்கும் எப்போதும் தயார்!; அரசியல் கட்சிகளுக்கு சஜித் சவால்
நாட்டின் பிரச்சினைகள் குறித்து விவாதம் தேவை என்று சமூகத்தில் பேசப்படுகிறது. எந்த விவாதத்திற்கும் எப்போதும் நான் தயார் .அதேவேளை நாட்டுக்கு சேவை செய்ய என்னோடு போட்டிக்கு வருமாறு ஏனைய அரசியல் கட்சிகளுக்குசவால் விடுக்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 140 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், முல்லைத்தீவு, முத்துஜயன்கட்டு, இடதுகரை அ.த.க பாடசாலைக்கு வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை இடம்பெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு சவால் விடுத்த அவர் மேலும் பேசுகையில்,
பொருளாதாரம், சமூகம், அரசியல், சர்வதேசம் என எந்த ஒரு தலைப்பிலும் விவாதத்தில் ஈடுபட தான் தயார். அதேபோல் விவாதம் புரிவதன் மூலம் நாட்டுக்கும் மக்களுக்கும் பெறுமானம் சேர்ப்பதாக அமைய வேண்டும். எதிர்க்கட்சியில் இருக்கும் காலத்தில் விவாதங்களுடன் மாத்திரம் மட்டுப்படாமல் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.
எந்த விவாதத்துக்கும் நா ன் தயாராக இருப்பது போலவே நாட்டுக்கு சேவை செய்ய எ ன்னோடு போட்டிக்கு வருமாறு ஏனைய அரசியல் கட்சிகளுக்கு சவால் விடுகின்றேன் விவாதங்களை நடத்துதற்கு போலவே நாட்டிற்கு அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும் நான் தயார்.
இன்று நமது நாட்டில் வறுமை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. உலக வங்கியின் அறிக்கையின் பிரகாரம், இலங்கையில் வறியவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இதன் காரணமாக மக்களின் வாழ்க்கை மற்றும் சுகாதாரம் சீர்குலைந்து போஷா க்கின்மை அதிகரித்து வருகின்றது.
தேசிய அளவில் வறுமை ஒழிப்புத் திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும். தற்போதைய நிலையில் குறிப்பிட்ட காலத்திற்கு பணத் தொகை வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இது தோல்வியுற்ற தற்காலிக தீர்வு . உற்பத்தி, முதலீடு, நுகர்வு மற்றும் சேமிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய வறுமை ஒழிப்புத் திட்டமொன்று தேவை என்றாலும், அரசாங்கம் விஞ்ஞானபூர்வமற்ற வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.
அண்மைய நாட்களாக மதிய உணவு வழங்க ஆரம்பப் பிரிவு பிள்ளைகளை மட்டும் அரசாங்கம் தெரிவு செய்தது தவறு. அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட வேண்டும் என்றார்.