
கச்சதீவு ஒப்பந்தத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்ற நினைத்தால் இலங்கை-இந்திய உறவில் பெரும் பாதிப்பு ஏற்படும்
கச்சதீவு ஒப்பந்தத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்ற நினைத்தால் அது பாரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் அது இலங்கை – இந்திய உறவில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரிகள் எச்சரித்திருக்கிறார்கள்.
இந்திய பாராளுமன்றத் தேர்தல் பிரசார மேடைகளில், குறிப்பாக தமிழ்நாடு பிரசார மேடைகளில் சூடான அரசியல் தலைப்புகளில் ஒன்றாக கச்சதீவு விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கின்ற நிலையிலேயே அவர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்கள்.
சிவசங்கர் மேனன்
‘கச்சவு ஒப்பந்தத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்ற நினைத்தால் ,அது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்’ என இலங்கைக்கான இந்தியாவின் முன்னாள் உயர்ஸ்தானிகர் சிவசங்கர் மேனன் எச்சரித்துள்ளார்.
‘கச்சதீவு ஒப்பந்தத்தை மீண்டும் கையில் எடுப்பது என்பது இந்தியாவின் தலைமை மீதும் நாட்டின் மீதான நம்பிக்கையின் மீதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
‘முன்னைய அரசாங்கத்தின் உடன்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி கேள்விக் குறியாக்கினால் தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்களை அடுத்து வருகின்ற அரசுகள் மறு ஆய்வு செய்வதை தடுக்க முடியாது’ என்றும் சிவசங்கர் மேனன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அசோக் காந்தா
இதேவேளை,’பழைய ஒப்பந்தங்களை மறு ஆய்வு செய்யும் அரசின் முடிவு மோசமான உதாரணமாக முடியும்’ என்று இலங்கைக்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் அசோக் காந்தா கூறியுள்ளார்.
‘பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் அண்டை நாடுகளுடன் இந்தியா செய்துகொண்ட உடன்பாடுகள் அனைத்திலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்’ என்றும் அசோக் காந்தா எச்சரித்துள்ளார்.
நிருபமா ராவ்
‘2022 ஆம் ஆண்டுவரை கச்சதீவு விவகாரத்தில் முந்தைய அரசின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாக பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் கூறியுள்ள அதேவேளை, கச்சதீவை மீட்பது இயலாத காரியம் என்று நீதிமன்றத்திலும் மத்திய அரசு கூறியுள்ளதாக இலங்கைக்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் நிருபமா ராவ் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், 2017 ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்தில் கச்சதீவு குறித்த கேள்விக்கு பதிலளித்த அப்போதைய வெளிவிவகார துறை இணை அமைச்சர் வி.கே.சிங்க் ,கச்சதீவில் மீன் பிடிப்பதால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதில்லை என்றும் எல்லை தாண்டி செல்வதாலேயே கைது செய்யப்படுவதாகவும் விளக்கமளித்திருந்தார் என்றும் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார்.